மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்!!

ஞாயிறு மார்ச் 17, 2019

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் நடந்த மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி இலங்கை ஆட்சியாளர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் ஒரு செய்தியைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

தமிழ் மக்களைக் கொன்றொழித்து போர் வெற்றி பெற்றதாக முன்னைய அரசு வீரம் பேசுகிறது.

கூடவே சிங்கள மக்களும் வன்னிப் போரின் வெற்றியை மட்டும் வியந்து பேசி களிப்படைகின்றனர்.

ஆனால் வன்னிப்போரின் போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பற்றியோ காணாமல்போனவர்கள் பற்றியோ அன்றி போரின் கொடூரத்தில் அநாதைகளாகிய குழந்தைகள் பற்றியோ சிங்கள மக்கள் எந்தக் கருசனையும் இல்லாமல் வன்னிப்பெரு நிலப்பரப்பில் ஏற்பட்ட அழிவுகள் தமிழ் மக்களுக்கானவை.

எனவே அதுபற்றியயல்லாம் நாம் கவலைப்படவோ கழிவிரக்கம் கொள்ளவோ தேவையில்லை என்பதுபோல நடந்த கொள்கின்றனர்.

இதற்கு மேலாக, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்த பின்னரும் இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென நினைக்காமல்,

தமிழ் மக்களுக்குத் தொடர்ந்தும் பாதகம் இழைப்பதையே நோக்காகக் கொண்டு ஆட்சியாளர்களும் பேரினவாதிகளும் செயற்படுகின்றனர்.

ஆட்சியாளர்களினதும் சிங்களப் பேரினவாதிகளினதும் இந்த வக்கிரத்தால்; பத்து ஆண்டுகளாகியும் யுத்தத்தில் காணாமல்போனவர்களையும்  உயிரிழந்தவர்களையும் நினைந்து நினைந்து அழுகின்ற அவலத்தை இன்னமும் தமிழ் மக்கள் இறக்கிவைக்கவில்லை.

இவ்வாறாக வேதனையோடும் துன்பத்தோடும் வாழுகின்ற தமிழ் மக்களின் கண்ணீரை எவரும் பெறுமதி குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதுதான் நம் தாழ்மையான கருத்து.

ஆம், போர் முடிந்து பத்து ஆண்டுகளில் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டிருக்குமாயின் இன்று இலங்கை நாட்டின் நிலைமை வேறாக இருந்திருக்கும்.

ஆனால் இன்னமும் தமிழ் மக்களை அழிக்க வேண்டும். அவர்களுக்கு எந்த உரிமையும் வழங்கலாகாது என்றெண்ணத்துடன் செயற்படுபவர்களின் ஈனத்தனத்தால், தமிழ் மக்கள் தங்களின் நிலைப்பாட்டை மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியூடாகத் தெரிவித்துள்ளனர்.

அதுதான் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என்ற செய்தியாகும்.

ஆம், தமிழ் மக்களை அடக்கி விட்டோம். அவர்களின் முதுகெலும்பை முறித்து விட்டோம் என்று சிங்களத்தரப்பு மார்தட்டுகிறது.

ஆனால் தமிழினம்  சொல்கிறது எம் இனத்தை அளித்த சிங்களப் பேரினவாதிகளே! நீவிர் எங்கள் பகைவர். உம்மை நாங்கள் ஒரு போதும் மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்.

போர் முடிந்து விட்டது என்பதற்காக பகை முடிந்து விட்டது என்று நினைத்தால் அது மகாதவறு.

ஆம், மறக்கவும் மன்னிக்கவும் மாட்டோம் என்ற கோசம் இலங்கையில் பகை இன்னமும் விலகவில்லை என்பதையே காட்டி நிற்கிறது.

இலங்கை செறு பகைக்குரிய நாடயிற்று. இனி அதன் எதிர்காலம் கடினம் என்பதையே சமகால சூழமைவு சுட்டி நிற்கிறது.

நன்றி-வலம்புரி