மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோதுமைக்கு அர்ஜென்டினா ஒப்புதல்!!

வெள்ளி அக்டோபர் 09, 2020

வறட்சியை தாங்கக் கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோதுமைக்கு அர்ஜென்டினா ஒப்புதல் வழங்கி உள்ளது.

உலகின் நான்காவது பெரிய கோதுமை ஏற்றுமதியாளராக அர்ஜென்டினா உள்ளது. இந்நாட்டில் சமீப காலமாக வறண்ட வானிலை நிலவுவதால் கோதுமை உற்பத்தி கடுமையாக பாதிப்பு அடைந்தது.

இதனால்,வறட்சியை தாங்கக் கூடிய அதே நேரத்தில் விளைச்சல் பாதிக்காத மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோதுமை உற்பத்திக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

உலகிலேயே முதல் நாடாக மரபணு மாற்ற கோதுமைக்கு அங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு அரசு பயோசெரஸ் நிறுவனத்துடன் இணைந்து வறட்சியை தாங்கும் வகையில் எச்பி4 தொழில்நுட்பத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோதுமையை உருவாக்கியுள்ளது.

ஆனால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோதுமை இறக்குமதிக்கு இதுவரை எந்த நாடும் ஒப்புதல் வழங்கவில்லை.

அர்ஜென்டினாவில் விளையும் 45 சதவீத கோதுமை பிரேசிலுக்கு ஏற்றுமதி ஆகிறது. எச்பி4 கோதுமைக்கு பிரேசில் ஒப்புதல் வழங்கியவுடன், வணிக ரீதியான கோதுமை அர்ஜென்டினாவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மரபணு மாற்றம் செய்யப்பட் கோதுமைக்கு பிரேசில் பெரிய சந்தையாக மாறும் என்று பயோசெரஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து பயோசெரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஃபெடரிகோ ட்ரூக்கோ,அர்ஜென்டைனா இன்று சர்வேதேச அளவில் தொழில்நுட்ப மாற்றத்தை முன்னெடுத்துள்ளது' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் எச்பி4 கோதுமை விதைகளை வழங்க உள்ளது.மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோதுமை விதைகள் வறட்சிகாரணமாக ஏற்படும் உற்பத்தி இழப்புகளை குறைத்து நல்ல விளைச்சலை தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.