மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தீர்மானங்கள்!

சனி ஜூலை 20, 2019

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று 20.07.2019 சனிக்கிழமை, காலை சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில்  கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் எண். 1 :
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 111-ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டை செப்டம்பர் 15, 2019 அன்று தலைநகர் சென்னையில் மிகவும் சிறப்பாக நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

 தீர்மானம் எண். 2 :
தமிழீழத்தில் 2009-ஆம் ஆண்டு இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த கொலைகாரன் ராஜபக்சேவுக்கு இந்திய அரசு துணை போனபோது, அதனைக் கண்டித்தும், சிங்கள அரசுக்கு இராணுவ உதவிகள் அளிக்கக் கூடாது என்றும் அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் பல கடிதங்கள் தீட்டினார்.

இந்தக் கடிதங்கள் தமிழில் மொழியாக்கம் பெற்று ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்னும் புத்தகமாக சென்னை, அண்ணாசாலை, இராணி சீதை அரங்கில் 15.07.2009 அன்று வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு விழாவில் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரைக்காக அவர் மீது தமிழக அரசு தேசத் துரோகச் சட்டப் பிரிவு 124-ஏ இன்கீழ் வழக்கு பதிவு செய்தது.

இவ்வழக்கில் விசாரணை முடிந்து ஜூலை 5, 2019 அன்று சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், பத்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கினார்.

அந்தத் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பெற்ற வைகோ, குறைந்தபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்று நீதிபதி எழுதி உள்ளதைக் கண்டு கொதித்துப் போன வைகோ அவர்கள் நீதிபதியைப் பார்த்து, “தண்டனையைக் குறைக்கச் சொல்லி நான் ஒருபோதும் கேட்கவில்லை; அதிகபட்சம் ஆயுள்தண்டனை கொடுங்கள் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், நான் சொல்லாத வார்த்தையை, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நான் கேட்காததை இத்தீர்ப்பில் எழுத வேண்டும் என்றால் நீதிபதியின் உள்ளத்தில் வெறுப்பு இருக்கிறது,” என்று உரக்கக் கூறினார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தந்தை பெரியாருக்கு எதிரான வழக்கில் 1938, டிசம்பர் 6-இல் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டபோது, தந்தை பெரியார் அவர்கள் “எவ்வளவு அதிக தண்டனை வேண்டுமானாலும் வழங்குங்கள்” என்று நீதிமன்றத்தில் முழங்கி வரலாறு படைத்தார். அதேபோன்று, ‘மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை, எமை மாட்ட நினைத்திடும் சிறைச்சாலை’ என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளுக்கு இலக்கணமாக வீரமுழக்கமிட்ட பெரியாரின் வாரிசு கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மீதான தேசத் துரோக வழக்கில் நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடிய கழக உயர்நிலைக்குழு உறுப்பினரும், சட்டத்துறைச் செயலாளருமான வழக்கறிஞர் திரு. ஜி.தேவதாஸ் அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் எண். 3 :
தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்திட தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டு, தி.மு.க. ஆதரவுடன் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஜூலை 6-ஆம் தேதி சட்டப் பேரவைச் செயலாளரிடம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்.

தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர்களும் முன்மொழிய, வைகோ அவர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

தேசத் துரோக வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் வைகோவின் வேட்பு மனு ஏற்கப்படுமா என்று தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் உள்ளத்திலும் மிகுந்த கவலையும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் ஏற்பட்டது. ஜூலை 9-ஆம் நாள் சட்டப் பேரவைச் செயலாளர் வைகோவின் வேட்பு மனுவை ஏற்றுக் கொள்ளப்படுவதாக அறிவித்ததும், வைகோ அவர்களை தமிழ் உலகமே வாழ்த்தியது.

இந்நிலையில் ஜூலை 11-ஆம் நாள் சட்டப் பேரவைச் செயலாளர், தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 பேர் உறுப்பினர்களாகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.

கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஜூலை 11-ஆம் நாள் மாலை 4.30 மணி அளவில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழைப் பெற்றுக் கொண்டார். பின்னர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.கழக முன்னோடிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளுடன் தந்தை பெரியார் நினைவிடம் அமைந்துள்ள பெரியார் திடல் சென்று ஐயா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். டாக்டர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லம் சென்று கலைஞர் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பின்பு தி.மு.கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் இல்லம் சென்று அவரிடம் தலைவர் வைகோ வாழ்த்து பெற்றார்.

டெல்லி நாடாளுமன்றத்தில் முதன்முதலாக 1978-இல் அடியெடுத்து வைத்த வைகோ அவர்கள் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை மக்களவை உறுப்பினராகவும் சீரிய முறையில் பணியாற்றினார்.

சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத்திற்கு கம்பீரமாகச் செல்லும் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சக்கணக்கான தொண்டர்களின் சார்பில் இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவித்து பெருமை கொள்கிறது.

தீர்மானம் எண். 4 
தேனி மாவட்டத்தில் தேவாரம் அருகில் உள்ள பொட்டிபுரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையைக் குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தாமே நீதிமன்றத்தில் வாதாடினார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த மார்ச்சு 26, 2015-இல் ‘நியூட்ரினோ ஆய்வகம்’ அமைக்கும் திட்டத்திற்குத் தடை ஆணை பிறப்பித்தது.

ஐ.நா. மன்றத்தின் புனெஸ்கோ அமைப்பால் பாதுகாக்கப்பட வேண்டிய இடமாக மேற்குத் தொடர்ச்சி மலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்குதான் பாதுகாக்கப்பட வேண்டிய பல்லுயிரிய மண்டலமும், மதிகெட்டாஞ்சோலை தேசியப் பூங்காவும் பொட்டிபுரத்திற்கு அருகே அமைந்துள்ளன. முல்லைப்பெரியாறு, இடுக்கி அணை உள்ளிட்ட 12 நீர்நிலைகளும், நியூட்ரினோ ஆய்வகம் அமைய உள்ள இடத்திற்கு அருகில் உள்ளன.

நியூட்ரினோ ஆய்வகத்தால் பல இலட்சம் டன் பாறைகள் உடைத்து நொறுக்கப்பட்டு சுற்றுச்சூழல் கெடுவதுடன், நீராதாரமும் பாழ்படும். கதிரியக்க அபாயமும் ஏற்படும் என்பதால்தான் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை ஆணை பெற்றார். தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வுப் பரப்புரைப் பயணமும் மேற்கொண்டு மக்களிடம் நியூட்ரினோ ஆய்வகத்தின் அபாயங்களை எடுத்துரைத்தார்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில் எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் வாங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ‘தேசிய பசுமைத் தீர்ப்பாய’த்தின் தென்னக அமர்வு மார்ச் 20, 2017-இல் இரத்து செய்துள்ளது.

மேலும் மார்ச்சு 31, 2018-இல் மதுரையில் தொடங்கி ஏப்ரல் 10, 2018 அன்று கம்பத்தில் நிறைவடைந்த நடைப்பயணத்தில் இலட்சக்கணக்கான பொது மக்களைச் சந்தித்து  பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தின் தீய விளைவுகளை விளக்கினார்.

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதுரையில் புறப்பட்ட தலைவர் வைகோ அவர்களின் நடைப்பயணத்தை தி.மு.கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் வில், புலி, கயல் கொடியை ‘வைகோ’விடம் கையளித்து தொடங்கி வைத்தார். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு வைகோவை வாழ்த்தினார்கள்.