மத்திய அரசின் பொறுப்பற்ற அணுகுமுறையே டெல்லி வன்முறைக்கு காரணம்! மம்தா பேனர்ஜி-

செவ்வாய் சனவரி 26, 2021

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள், குடியரசு நாளான இன்று உழவு இயந்திர பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார்கள். 

இந்நிலையில் விவசாயிகள் பேரணியாக செங்கோட்டையை நோக்கி வந்தபோது காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் ஒரு விவசாயி உயிரிழந்தார். மேலும் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசினர், இதனால் அந்த இடமே போர்க்களம் போல் ஆனது.

இன்று நடந்த போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது, மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

மேலும் மத்திய அரசு உடனடியாக கருப்பு சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தனர்.

மத்திய அரசின் பொறுப்பற்ற அணுகுமுறை மற்றும் விவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே டெல்லி வன்முறைக்கு காரணம் என்று திரிணாமூல் கொங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ட்வீட் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்

டெல்லியில் நடந்த வேதனையான சம்பவங்களால்  நான் மிகுந்த கலக்கமடைந்தள்ளேன். எங்கள் விவசாய சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் மீதான மத்திய அரசின் பொறுப்பற்ற அணுகுமுறையும், அலட்சியமும்தான் இந்த நிலைமைக்கு குற்றம்சாட்டப்பட வேண்டும்.

முதலாவதாக, விவசாயிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தாமல் இந்த சட்டங்கள் இயற்றப்பட்டன. கடந்த 2 மாதங்களாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் முகாமிட்டிருந்தபோதிலும், மத்திய அரசு அவர்களைக் கையாள்வதில் மிகவும் சாதாரணமாக இருந்தனர்.

உடனடியாக மத்திய அரசு விவசாயிகளுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும் மற்றும் கடுமையான மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்