மது அருந்திவிட்டு பயணிகள் பேருந்து செலுத்திய காரைநகர் சாலை சாரதி கைது

ஞாயிறு அக்டோபர் 20, 2019

இலங்கை போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலையில் பணியாற்றும் 52 வயதுடைய சாரதி ஒருவரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

குறித்த சாரதி நேற்றிரவு (19) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தைச் செலுத்திவந்தபோதே கைது செய்யப்பட்டார். 

கொழும்பில் இருந்து நேற்றிரவு 7 மணியளவில் பயணித்த மேற்படி பேருந்து அதிக வேகத்தில் வீதி ஒழுங்குகளை மீறிப் பயணித்தது. இதனால் அச்சமடைந்த பயணிகளில் ஒருவர் பொலிஸாரின் அவசர இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தகவலைத் தெரிவித்தார். 

குறித்த பேருந்து சாலியவௌ 18 ஆம் கட்டையில் பயணித்துக்கொண்டிருந்தபோது இடைமறித்த பொலிஸார் சாரதியைச் சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போது அவர் அதிக மது அருந்தியமை தெரியவந்தது. 

கொழும்பில் பேருந்து புறப்படும் முன்னர் அவர் மது அருந்தியதை ஒப்புக்கொண்டார் எனக் கூறப்படுகின்றது. இதையடுத்து அவரைக் கைது செய்த பொலிஸார் பயணிகளுக்கு மாற்று ஏற்பாட்டைச் செய்து கொடுத்தனர். 

வடக்கில், இதுபோன்று சாரதிகள் மது அருந்தவிட்டு வாகனங்களைச் செலுத்துவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. 

சில சாரதிகள் பொலிஸார் கைது செய்யும்போது இலஞ்சம் கொடுத்துவிட்டு தப்பிவிடுகின்றனர் எனவும் கூறப்படுகின்றது. 

மேலும், வாயில் பீடி மற்றும் சிகரட் போன்றவற்றைப் புகைத்துக்கொண்டும் சாரதிகள் பேருந்துகளைச் செலுத்திச் செல்கின்றனர். இதனால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உட்படுகின்றனர் என்பது குறிப்பிடத்கத்கது.