மது உற்பத்தி சாலைகளையும் மூட வேண்டும் - தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன்!

வெள்ளி மே 08, 2020

மதுவிலக்கை ரத்து செய்து மதுக்கடைகளைத் திறப்பதென தமிழக அரசு முடிவு செய்த நாளிலிருந்து தொடர்ந்து அதை எதிர்த்துப் போராடியவன் என்ற முறையில் சமுதாயச் சீரழிவிற்கு பெரும் காரணமான மதுக் கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு செய்துள்ள முடிவினை வன்மையாகக் கண்டிக்கிறேன். பல அரசியல் கட்சிகளும் சமூகத் தொண்டு அமைப்புகளும் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்த செய்துள்ள முடிவினை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

அதே வேளையில் தமிழ்நாட்டில் மது உற்பத்தி சாலைகள் 11, பீர் தயாரிக்கும் நிறுவனங்கள் 8 உள்ளன. இவற்றிலிருந்துதான் அரசின் மதுக் கடைகளுக்குத் தேவையான மது புட்டிகள் வாங்கப்படுகின்றன. இவற்றின் உரிமையாளர்களாக அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களுக்கு மிக நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள். அரசியல் தலைவர்கள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி மது தொழிற்சாலைகளை மூடும்படி வற்புறுத்த வேண்டும். மறுத்தால் அத்தகையவர்களை தங்கள் கட்சிகளிலிருந்து நீக்க வேண்டும்.

அதைப் போல தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான மதுக்கடைகளில் உள்ள தனியாருக்கு சொந்தமான மதுக் கூடங்கள் (பார்) பெரும்பாலும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுகின்றன. இத்தகையவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சிகள் முன் வர வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.

கொரோனா தொற்று பரவுவதற்கு கோயம்பேடு சந்தை முக்கிய காரணமாக இருந்ததால் அதை மூடியது போல மதுவினால் ஏற்படும் சமூகச் சீரழிவிற்கு காரணமான மது உற்பத்தி சாலைகளை மூடுவதற்கு அனைவரும் இணைந்துப் போராட முன் வர வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.   

என்று அவர் விடுத்த அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.