மதுவால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகள்!

புதன் செப்டம்பர் 04, 2019

மதுப்பழக்கத்தால் நிறைய உளவியல் பிரச்சினைகளை மது குடிப்போர் சந்திக்கிறார்கள். அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.

மதுப்பழக்கத்தால் கல்லீரல், கணையம் போன்ற உடல் உறுப்புகள் கெட்டுப்போகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுதவிர நிறைய உளவியல் பிரச்சினைகளையும் மது குடிப்போர் சந்திக்கிறார்கள். அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதிக அளவில் புதிய குடிநோயாளிகள் உருவாகும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி வருகிறது.

இந்தச் சூழலில், இந்தியாவில் மது அருந்துவோர் குறித்து ஒரு ஆய்வை நடத்தியது ஜெர்மனியில் உள்ள டி.யூ.டிரெஸ்டன் பல்கலைக்கழகம். 2010 முதல் 2017-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட அந்த ஆய்வில், மது அருந்துவோரின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் அந்த ஆய்வின் முடிவில், மதுவுக்கு அடிமையானவர்களை 200 வகையான நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொண்டாடுவதற்கும், கூடி பிரிவதற்கும் மட்டுமே உலகம் முழுவதும் மது குடிக்கிறார்கள். ஆனால், இங்கு குடி என்பது நோயாக மாறியிருக்கிறது. சிறு வயதிலேயே பலமிழந்து, உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் மருத்துவமனைகளில் கிடக்கிறார்கள். மதுப்பழக்கத்தால் நிறைய உளவியல் பிரச்சினைகளையும் சந்திக்கிறார்கள். அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.

மது அருந்துவதால்‘ஆல்கஹால் இண்டியூஸ்டு சைக்காட்டிக் டிஸ் ஆர்டர்’ என்ற மனப்பிறழ்வு நோய் ஏற்படுகிறது. மனப்பிறழ்வு என்பதை ‘பித்துப்பிடித்தாற்போல’ என்றும் குறிப்பிடலாம். அதாவது, காதில் மாயக்குரல்கள் கேட்பது, தன்னை யாரோ கத்தியால் குத்தவோ, வெட்டவோ வருவது போன்ற மாய பிம்பங்கள் தோன்றுவது, தனக்கு யாரோ செய்வினை அல்லது சூனியம் வைத்துவிட்டது போல நினைப்பது, பிறர் தன்னைப் பற்றியே பேசுவதாக நினைப்பது போன்ற பல்வேறு மனநிலைக்கு ஆளாவார்கள். இதனால் தான் தற்கொலை செய்து கொள்வது, கொலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மதுப்பழக்கம் உள்ள சிலர், தன்னுடைய மனைவி மீது சந்தேகப்படுவார்கள்.

தொடர்ச்சியாக, மது அருந்துவதால் நரம்பியல் கோளாறுகள், கை, கால் தளர்ந்து போவது, கால் எரிச்சல், ‘எரெக்டைல் டிஸ்பங்ஷன்’ என்ற ஆண்மை கோளாறு போன்றவை ஏற்படும். ‘சிரோசிஸ் ஆப் த லிவர்’ என்பது மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு பரவலாக காணப்படும் கல்லீரல் நோய். இதுமட்டுமன்றி பார்வைக் கோளாறுகள், உடல்பருமன் மற்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

மது அருந்துவதால் உணவுக் குழாய் முழுவதும் பாதிக்கப்படும். மிதமிஞ்சிய மதுப்பழக்கத்தால் ‘கிரானிக் பேங்கிரியாட்டிடிஸ்’ எனும் நிலைக்குச் சென்று அடிவயிற்றில் வலி ஏற்படும். ஆகவே தான் மதுப்பழக்கத்தை ‘குடி நோய்’ என்கிறார்கள்.

கல்லூரி மாணவர்கள் 10 பேரிடம் மதுப்பழக்கம் அறிமுகமானால், அதில் ஆறு பேர் தப்பிவிடுவார்கள். ஆனால், நான்கு பேர் தீவிர மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி சுமார் 35 வயதிலிருந்து 40 வயதுக்குள் எல்லா வகையான உடல் பிரச்சினைகளுக்கும் ஆளாகிவிடுவார்கள். சில நேரங்களில் மதுப்பழக்கம் என்பது மரபணுக்களாலும் தீர்மானிக்கப்படுகிறது.

மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள் குடிநோயாளிகளாக இருந்தால், அடுத்த தலைமுறைக்கும் அது பரவும் என்கிற தியரி உண்டு. அதனால், முன்னோர் மதுவுக்கு அடிமையாகியிருந்தால், அடுத்த தலைமுறையினர் மதுவிலிருந்து விலகியிருப்பதே நல்லது.