மூச்சுத் திணறல் அதிகமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் மாற்றப்பட்டார் சசிகலா!

வியாழன் சனவரி 21, 2021

வருகின்ற 27ஆம் தேதி விடுதலையாக இருக்கும் நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. 

இதையடுத்து அவருக்கு பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் பிராணவாயு செலுத்தி, அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைவடைய உள்ளது.

அவர் வருகிற 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு முதல் கட்டமாக சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால், நேற்று மாலை 5.45 மணியளவில் மேல் சிகிச்சைக்காக அவர் பெங்களூரு பவுரிங் அரசு மருத்துவமனையின் தண்டனை கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் தண்டனை கைதிகளை காண வார்டில் போதிய வசதி இல்லாததால், சிகிச்சை பிரிவில் மாற்றப்பட்டதாக சிறை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்தன.

மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சசிகலாவுக்கு கடந்த 5 நாட்களாக காய்ச்சல் இருந்ததாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அடிக்கடி மூச்சுத்திணறலும் இருக்கிறது. உடலில் பிராண வாயு அளவு குறைவாக இருப்பதால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம் - வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் தகவல் தெரிவித்தார்.