முக்கிய மரபணு இழப்பால் மனிதர்களுக்கு மாரடைப்பு?

திங்கள் அக்டோபர் 07, 2019

மனிதர்களுக்கு சாதாரணமாக உண்டாகும் இதய நோய்கள், விலங்குகளிடம் அரிதாகவே காணப்படுகின்றன என்கின்றனர், விஞ்ஞானிகள்.

மனிதர்களுக்கு சாதாரணமாக உண்டாகும் இதய நோய்கள், விலங்குகளிடம் அரிதாகவே காணப்படுகின்றன என்கின்றனர், விஞ்ஞானிகள். இருபது லட்சம் முதல் முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு இடையில் நமது முன்னோர்கள் ஒரு மரபணுவை இழந்துள்ளனர்.

அவர்களிடம் மரபணுத் திரிபு ஏற்பட்டு, சிஎம்ஏஎச் என்கிற மரபணு செயலிழந்துள்ளது. இந்த மரபணுத் திரிபு, பரிணாம சங்கிலித்தொடரில் சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால், மனித இனம் உருவாவது வரை கடந்து வந்துள்ளது.

அமெரிக்கா கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி விஞ்ஞானிகள் நடத்திய புதிய ஆய்வு, இந்த மரபணுத் திரிபு ஏற்பட்டதன் காரணமாகத்தான் மனிதர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கிறது.

உலக அளவில், 70 வயதுக்கு உட்பட்ட பலரும் முன்கூட்டியே இறப்பதற்கு இதய நோய்கள் காரணமாகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

இதய நோய்களால் உலக அளவில் ஆண்டுதோறும் 1.70 கோடிப் பேர் இறக்கின்றனர். 2030-ம் ஆண்டுக்குள் இவ்வாறு இறப்போரின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.

பெரும்பாலான நேரங்களில் ரத்தக் குழாய்களில் கொழுப்பு அடைத்துவிடுவதால் உடலின் முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் குறைந்து இதய நோய்கள் ஏற்படுகின்றன.

மனிதர்களிடம் இது பொதுவாக காணப்படும்போது, அதிக உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள சிம்பன்சிகளிலும், திமிங்கலங்கள் மற்றும் டால்பின்களிலும் இது நடைபெறுவதற்கு எந்தச் சான்றும் இல்லை.

ஆனால் மனிதர்களுக்கு மட்டும் மாரடைப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்?

இதுதொடர்பான ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான அஜித் வார்க்கி, அவரது முந்தைய ஆய்வுகளில், இவ்வாறு ரத்தக் குழாய்கள் கொழுப்பால் அடைபட்டுவிடுவது, மனிதர் களிடம் உள்ளதே தவிர, விலங்குகளிடம் இல்லை என்பதைக் கண்டறிந்திருக்கிறார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நடத்திய சோதனையில், சிம்பன்சி மற்றும் பிற பாலூட்டி விலங்குகளைப் பிடித்து வைத்து, மனிதர்களுக்கு பொதுவாக ஏற்படும் ஆபத்துகள் இந்த விலங்குகளுக்கு ஏற்படுகிறதா என்று சோதிக்கப்பட்டது.

ஆனால் அப்போது, முக்கியக் கண்டுபிடிப்பு எதுவும் பதிவாகவில்லை. சிம்பன்சிகளிடம் மாரடைப்பும், ரத்தக் குழாய் அடைப்பும் காணப்படவில்லை.

இதனால், மனிதர்களைப்போல செயல்படுவதற்கு மரபணுவை மாற்றி அல்லது அறிவியல் ஆய்வுக்காக அளவற்ற கொலஸ்டிராலை வழங்கினால் மட்டுமே விலங்குகளுக்கும் இதய நோய்கள் வருகின்றன என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தத் தொடங்கினர்.

தேசிய அறிவியல் கழகப் பத்திரிகையில் வெளிவந்த இந்த ஆய்வில், மனிதர்களைப் போல சிஎம்ஏஎச் மரபணு நீக்கப்பட்ட சோதனை எலிகளை வார்க்கியும், அவரது அணியினரும் பயன்படுத்தினர்.

இன்னொரு பிரிவு எலிகளில் இந்த மரபணு நீக்கப்படவில்லை.

இந்த இரு பிரிவு சோதனை எலிகளுக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட்டு, ஒரே மாதிரி இயங்கச் செய்யப்பட்டாலும், இந்த மரபணு நீக்கப்பட்ட எலிகளின் ரத்தத்தில் இரண்டு மடங்கு கொழுப்பு அதிகரித்திருந்தது. ‘சிஎம்ஏஎச் மரபணு நீக்கப்பட்ட சோதனை எலிகளிடம், அவற்றின் எடை குறையாமலேயே இதய நோய்கள் வருவதற்கான அறிகுறிகள் தோன்றியிருந்தன’ என்று கூறும் இந்த ஆய்வு, ‘இந்தத் தரவுகள், மனித இனம் பரிணாமத்தில் இழந்துவிட்ட சிஎம்ஏஎச் மரபணு, மனிதர்களிடத்தில் இதய நோய்கள் ஏற்படுவதற்கான நிலைமையைத் தோற்றுவித்தது என்பதை சுட்டிக்காட்டுகின்றன’ என்கிறது.

உடலியக்கம் குறைவது, அதிக அளவு கொலஸ்டிரால், வயது, நீரிழிவு, உடல் பருமன், புகைபிடித்தல், இறைச்சி உணவு ஆகியவை இதய நோய்கள் ஏற்படக் காரணமாகின்றன.

ஆனால், முதல் முறை இதய நோய் ஏற்படுபவர்களில் 15 சதவீதத்தினருக்கு இந்தக் காரணிகள் இருப்பதில்லை என்று கூறும் வார்க்கி, அதற்குக் காரணம் மனிதர்களுக்கு மரபணுத் திரிபு ஏற்பட்டு இருப்பதுதான் என வாதிடுகிறார். இதுகுறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.