முக்கிய உடன்படிக்கைகள் கைவிடப்பட்டுள்ளதாக இந்தியா அதிருப்தி!!

திங்கள் டிசம்பர் 06, 2021

சிறீலங்காவில் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நிதி அமைச்சர் பசில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த விஜயத்தின் போது இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கையொப்பமிடப்பட்ட சில முக்கிய உடன்படிக்கைகள் அமுல்படுத்தப்படவில்லை என இந்தியா குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் ஆங்கில நாளிதழ் ஒன்று இது பற்றிய செய்தி வெளியிட்டுள்ளது.இரு நாடுகளுக்கும் இடையில் கையொப்பமிடப்பட்ட இவ்வாறான சில முக்கிய உடன்படிக்கைகள் கைவிடப்பட்டுள்ளதாக இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் அமுல்படுத்துவதாக இணங்கப்பட்ட மூன்று முக்கிய உடன்படிக்கைகள் அமுல்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகம், யுகதனவி மின் உற்பத்தி நிலைய பங்கு விற்பனை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்பட்டதாக ராஜதந்திர வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.இதேவேளை,நிதி அமைச்சரின் இந்திய விஜயம் வெற்றிகரமாக அமைந்தது அரசாங்கத் தரப்பு தகவல்கள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.