முகமூடியை கழற்றாமலே மொபைலை இயக்கலாம்!

ஞாயிறு ஜூலை 26, 2020

ஜப்பானில் தீவிர ரோபோ ஆராய்ச்சியில் இருந்த, டோனட் ரோபோடிக்சின் விஞ்ஞானிகள்,அதை அப்படியே விட்டுவிட்டு, புத்திசாலித்தனமுள்ள முக கவசத்தை தயாரிக்கும் வேலையில் இறங்கிவிட்டனர்.

கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் முக கவசத்தை கழற்ற தேவையே இல்லாமல் மொபைலை இயக்கவும், பேசவும், குறுஞ்செய்தி அனுப்பவும் உதவும், 'சி-மாஸ்க்' என்ற சிறப்புக் கருவியை டோனட் ரோபோடிக்ஸ் தயாரிக்கிறது.

இந்த முக கவசத்திற்குள் ஒரு புளூடூத் வசதியுள்ள ஒலி வாங்கி இருக்கிறது.

இது அணிபவரின் குரல் உத்தரவுகளை,டோனட் ரோபோடிக்ஸ் தயாரித்துள்ள ஒரு செயலிக்கு அனுப்ப,அந்த செயலில் அவரது மொபைலை இயக்குகிறது.

இதன் மூலம், ஒருவர் தன் கருத்துக்களை குறிப்பெடுக்கும்படி மொபைலுக்கு உத்தரவிடலாம். அந்த குறிப்புக்களை ஒருவருக்கு குறுஞ்செய்தி, அல்லது மின்னஞ்சலாக அனுப்பும்படி உத்தரவிடலாம். மொபைலை தொடாமலேயே குரல் அழைப்புகளையும் செய்ய முடியும்.

இத்தனை வசதிகளோடு,கொரோனாவை பரப்பாமல் தடுக்கவும்,தொற்று ஏற்படாமல் தடுக்கவும் முடிகிறது என்றால் கேட்கவா வேண்டும்? ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள சி-மாஸ்க் சந்தைக்கு வருவதற்குள் பலபேர் ஜப்பானில் முன்பதிவு செய்துவிட்டனர்.