முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல்கள் - ஒரு பார்வையும், சில கரிசனைகளும்!

சனி மே 25, 2019

மிகச் சமீபமாக வெளிவந்த முள்ளிவாய்க்கால் நினைவான புதிய பாடல்களை ஆங்காங்கே கேட்க முடிகிறது. வருடா வருடம், ஒவ்வொரு நிகழ்வுகளிற்கும், ஒவ்வொரு மூலையிலிருந்தும் தனித் தனியாகவும், கூட்டுழைப்பாகவும் இப்படியான பல பாடல்கள், பல இசைத்தட்டுக்கள் வெளிவருகின்றன.கலையின் வழியும், இசையின் வழியும் நம் வாழ்வும் வரலாறும் பதிவு செய்யப்படுவது பெறுமதியான விடயம் என்பது உண்மையே. பாராட்டுக்கள்.

ஆனாலும் …அவசரத்தனமாக, அல்லது வலிந்து ஒரு படைப்பை உருவாக்க முற்படுகிற போது, அதன் வீரியம் பலவீனமடைகிறது. படைப்பினுடைய உயிர்ப்புத்தன்மை நலிவடைகிறது.

இயல்பாக, ஒரு உந்துதலில் உருவாகுகிற படைப்புக்கும், அவசரத் தேவை கருதி உற்பத்தி செய்கிற படைப்புக்கும் இடையிலான, பாரிய வேறுபாட்டை ஒரு படைப்பாளி உணர்ந்து கொள்வான்.

தவிர்க்க முடியாத இத்தகைய நிர்ப்பந்தங்களில், ஒரு படைப்பாளி தன்னை அறுவைச் சிகிச்சை செய்து குறைப் பிரவசங்களைப் பரிசளிப்பது ஒரு புறமும், தன்னை அடையாளப்படுத்தவும், நிலை நிறுத்தவும் இத்தகைய சந்தர்ப்பங்களை அவசர அவசரமாக பயன்படுத்திக் கொள்வது மறுபுறமும் நடப்பதுண்டு.

ஈழ விடுதலைப் பாடல்களுக்கென்று ஒரு தனித்த வரலாறும், தனிச் சிறப்பும் உண்டு. நம் புரட்சிப் பாடல்களின் மெட்டுக்கள் தனித்துவமானவை. விடுதலையை அவாவி நிற்கின்ற இதயங்களின் நாளச் சூட்டை, இராகங்களின் வழி பதிவு செய்தவை.

அதற்கான பிரதான காரணம்,

1. அந்தப் படைப்பிற்குரிய கலைஞர்கள் யாவரும், அந்தக் களங்களுக்குள்ளிருந்து வந்தவர்கள்.

2. அவர்களின் வரிகள் ஒவ்வொன்றிலும் நிதர்சனம் குடியிருந்தது.

3. அவர்களின் மெட்டுக்கள் ஒவ்வொன்றும், போரின் யதார்த்தம் அறிந்தவை.

4. அவர்களின் குரல் ஒவ்வொன்றும் போரின் பிரளயத்தை உள்வாங்கி வைத்திருந்தவை.

அத்தகைய கள மனிதர்களிடமிருந்து...அத்தகைய மனிதர்களின் உறவுகளிடமிருந்து…. வருகிற படைப்புக்கள் உயிர்ப்புள்ளவையாக இருப்பதில் எந்த ஆச்சரியமுமே இல்லை. இதுவே ஈழப் பாடல்கள் தம்மை தனித்துவம் மிக்கவையாக அடையாளம் காட்டி நிற்பதற்கான பிரதான காரணம்.

· இன்றைக்கு வருகிற பாடல்கள் அத்தகைய தனிச்சிறப்புக்களை, மெல்ல மெல்ல இழந்து வருகின்றனவோ என்று அச்சப்பட வேண்டியிருக்கின்றது.

· தென்னிந்தியச் சினிமாவினுடைய தவிர்க்க முடியாத பாதிப்பு எங்களையறியாமல் சில இடங்களில், எங்களைப் பற்றிக் கொள்வது பற்றி நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டியிருக்கிறது.

· பழைய பாடல்கள் போல் புதிய பாடல்கள் இல்லை என்கிற குற்றச்சாட்டுக்கள் தமிழ்ச் சினிமாவுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது.

கவிஞர்கள் எல்லோரும் பாடலாசிரியர்களாகிவிடுவது சாத்தியமற்றது. ஒரு ஆர்வக் கோளாற்றில் நாங்கள் முயற்சிக்கின்றோம். அதில் தவறேதுமில்லை. எனினும் ஒரு படைப்பாக, அதனை வரலாற்றில் ஆவணப்படுத்த முன்பு நிறைய சிந்திக்கவும்,திருத்தவும், தேவைப்பட்டால் முற்றாக தவிர்த்துக் கொள்ளவும் கூடிய, மனப்பக்குவத்தை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு நாட்டிலிருந்து பாடல் எழுத,ஒரு நாட்டிலிருந்து இசையமைக்க,ஒரு நாட்டிலிருந்து பாடுகிற தொழினுட்ப வசதிகள் இலகுவானதாகத் தெரியலாம். ஆனாலும், ஒரு கூட்டுணர்வின் பெறுமதி மிக்க ஆவணங்களாக இத்தகைய நமது ஈழ விடுதலைப் பாடல்கள் இருக்க வேண்டும்.

பாடல்களை வெறும் எண்ணிக்கைகளால் உயர்த்துவதல்ல நமது வரலாற்றுக்கான இசையின் பணி. நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நம் வரலாற்றை,வலியை, கொடுத்த விலைகளை என எம் வேரின் விலாசத்தை அறிமுகப்படுத்துவதற்கு, மிக முக்கியமான ஊடக வழியாக எமது இசை வடிவம் இருக்கும். எனவே இப்படியான முயற்சிகள் தம்மை மீள் பரிசோதனையும்,சுய விமர்சனமும் செய்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

விருதுகளுக்கும்,வியாபாரங்களுக்கும்,விளம்பரங்களுக்கும் அப்பாலானது எங்கள் விடுதலைப் பாடல்கள். சத்தியத்தை தன் எல்லா படைப்புக்களிலும் சுமந்திருக்கும், நமது விடுதலைப் பாடல்கள் இன்னுமின்னும் வீரியம் மிக்கவையாக, உணர்வின் ஒரு துளியும் குன்றாததாக படைக்கப்பட வேண்டும்.

வரிகளை இசை தூக்கி நிறுத்தவேண்டுமே தவிர, இசை வரிகளை விழுங்கி விடக் கூடாது.

இசையமைப்பாளன் எந்தத் தருணத்திலும் தன் ஆளுமையை அடையாளப்படுத்துவதற்காக, பாடல்களின் வரிகளை ஆழத்தில் புதைத்து விடக் கூடாது. ஈழப் புரட்சிப் பாடல்களின் இசையென்பது, வரிகளைச் சுமக்கும் தாயாகவே இருக்க முடியும்.

மெட்டுக்கள், ஒரு மூலப் பாடலின் பிரதியாக இருக்கக் கூடாது. அத்தகைய செயல், மூலப் பாடலையும் சோபையிழக்கச் செய்து விடும். மெட்டுக்கள் புதிது புதிதாய் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

தேனிசை செல்லப்பாவினுடைய பாடல்கள் பலவற்றில் இருக்கின்ற பலவீனம், ஒன்றைப் போலவே பலவும் அமைந்து விடுவது. அவரின் குரல், தொணி, இசை என யாவும் ஒரே மாதிரியாகவே தொடர்ச்சியாக அமைவதால் கேட்பவர்களுக்கு அயர்ச்சியையும், சலிப்பையும் ஏற்படுத்தி விடுகின்றன.

கண்ணனினுடைய இசை தனித்துவமானது. ஒரு இசைத் தட்டிலுள்ள ஒவ்வொரு பாடல்களுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புறாத அழகிய இசைகளை நெய்திருப்பார்.

கடலிலே காவியம் படைப்போம், நெய்தல் ஆகிய இசைத் தட்டுக்களில் அமைந்த அத்தனை பாடல்களும் சிறப்பாக அமைந்தவை.

புதுவை, காசி ஆனந்தன், பண்டிதர் ச.வே பஞ்சாட்சரம் , பண்டிதர் வீ.பரந்தாமன், வேலணையூர் சுரேஸ் போன்ற பாடலாசிரியர்கள் ஆழமும், சொற்கட்டும் கனகச்சிதமாக அமைந்த பாடல்களைப் படைத்தனர்.

பொன். சுந்தரலிங்கம், வர்ண இராமேஸ்வரன், பார்வதி சிவபாதம் போன்ற பாடகர்கள் தம் குரலால் பாடல்களுக்கு உயிர் கொடுத்தனர்.

ஒவ்வொரு வரிகளிலும், ஆலாபனைகளிலும் கூட அவர்கள் அந்தப் பாடலை தம்மால் முடிந்த வரை அழகு படுத்திச் சென்றிருப்பார்கள்.

மாவீரன் மேஜர் சிட்டு, தன் எல்லாப் பாடல்களிலும் தன் முத்திரையைப் பதித்திருப்பார். அவரோடு சேர்ந்து கேட்கிறவர்களையும் பாடச் செய்திருப்பார். தன் உணர்ச்சியின் பெருக்கை கேட்கும் எங்கள் மீதும் படிய விட்டிருப்பார்

குமாரசுவாமி என்ற பாடகர் ‘‘பூத்த கொடி பூக்களின்றித் தவிக்கின்றது” என்ற பாடலின் மூலம் எங்களையும் கதறியழச் செய்திருப்பார். ஒவ்வொரு வரிகளிலும் கீழிறங்கி மேலேறி என்று தன் குரலைப் பிழிந்து உணர்வைச் சாறாக்கிக் கொடுத்திருப்பார்.

சாந்தன்,சுகுமார்,திருமலைச் சந்திரன், மணிமொழி,பிரின்சி என பற்பல பாடகர்கள் பல உயிரோட்டம் நிறைந்த பாடல்களை தந்திருக்கிறார்கள்.

1. தென்னங்கீற்றுத் தென்றல் வந்து மோதும் இன்றைக்கும் எம்மை அன்றைய நாட்களுக்கு அழைத்துச் செல்கிறது.

2. காகங்களே காகங்களே நம்மை இந்திய இராணுவ காலத்திற்கு கூட்டிப் போகிறது.

3. அடைக்கலம் தந்த வீடுகளே எங்களை பெருமூச்செறிய வைக்கிறது.

4. இந்த மண் எங்களின் சொந்த மண் இப்போதும் கட்டிப் போடுகிறது.

5. இரத்தத்திலே சிவந்த மண்ணே ஒரு தனித்துவமான குரலும், இசையும் கொண்ட பாடலாகி இருக்கிறது.

6. மாங்கிளியும் மரங்கொத்தியும்… வரிகளும்,இசையும்,குரலும் ஒருங்கே சிறப்புற அமைந்த பாடல்.

7. தீயினில் எரியாத தீபங்களே இன்றைக்கும் எம்மை உருகியழ வைக்கிற பாடல்.

8. அழகான அந்தப் பனைமரம், அன்னைத் தமிழீழ மண்ணே...பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே…

என்று ஏராளம் பாடல்களை உதாரணம் சொல்லிக் கொண்டு போகலாம்.

பாடல்களை தரவரிசைப் படுத்துவதோ அல்லது பாடகர்களை வழிமொழிவதோ அல்லது இசையமைப்பாளர்களைப் பின்பற்றச் சொல்வதோ அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். இதையும் தாண்டிய சிறப்பு மிகுந்த தனித்துவமான பாடல்கள், சிலவேளைகளில் நமக்கு நாளை கிடைக்கக் கூடும்.

வெறும் அன்றைய நாளுக்கான ஆவிபறக்கிற பாடல்களை, அவசர அவசரமாக உருவாக்காமல், பொறுமையோடும், அர்ப்பணிப்போடும் கூடிய நீடித்து நிற்கிற கீதங்களை உருவாக்குவதில் கரிசனை கொள்ளச் செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

முகப்புத்தகங்களில் பகிர்வதோடும், வானொலியில் ஒலிபரப்புவதோடும்,காட்சிகளைப் பொருத்தி காணொளிகளாக்கி இணையத்தில் காட்சிப்படுத்துவதோடுமென அன்றைய நாளின் செயற்பாட்டோடு முடிந்து விடுவது அல்ல விடுதலைப் பாடல்களின் நோக்கம்.

இங்கே நான் குறிப்பிடாத, திடீர் ஞாபகங்களுக்கு வராத பெறுமதியான பாடல்கள் பல இருக்கலாம். உதாரணங்களுக்காக எடுத்துக் காட்டியவையே இப்பாடல்களும், பாடகர்களும், பாடலாசிரியர்களும்,

இசையமைப்பாளர்களும்.

அது போல குறித்துச் சொல்கிற ஒரு முள்ளிவாய்க்கால் பாடலுக்கான பார்வையல்ல இந்தக் கட்டுரை. இம்முறை வெளிவந்த எல்லாப் பாடல்களுக்கும், எல்லாக் குறுந்தட்டுக்களுக்குமானவையே.

இது முள்ளிவாய்க்கால் நினைவு வெளியீட்டிற்கு மட்டுமல்லாது தலைவர் பிறந்த நாள்,மாவீரர் நாள்,திலீபன் நினைவு நாள்,அன்னை பூபதி நாள் என எல்லா நினைவு நாட்களிலும் ஆங்காங்கு வருகின்ற எல்லா வெளியீடுகளுக்கும் பொருத்தமானது.

வெறும் குறுகிய காலத்தில் ஒரு இசைப் பேழையை உருவாக்க முடியாது. நிறைந்த தேடலும், பொறுமையும், கற்பனை வளமும், காத்திருப்பும், கடின உழைப்பும், கூட அவசியமாகின்றது.

அது போல ஆரோக்கியமான விமர்சனப் பார்வைகளும், குறைகளைச் சுட்டிக் காட்டுகின்ற விமர்சகர்களும், அதை ஏற்றுக் கொள்கிற கலைஞர்களும் என எல்லோரது ஒருமித்த செயற்பாடுகளின் பலனாக நாம் எமக்கென ஒரு தனித்த இசைப் பாதையை வரலாற்றில் விட்டுச் செல்ல முடியும்.

இவற்றையெல்லாம், இனிவரும் இசைப்பேழைகள் கவனத்தில் கொண்டு, தமக்கிருக்கும் பொறுப்பின் முக்கியத்துவம் உணர்ந்து வெளிவரும் என்கிற நம்பிக்கையுடன் நகர்வோம்.

நம் விடுதலைப் பாடல்களில் மாவீரர்கள் உயிர் வாழ்கிறார்கள்.

நம் விடுதலைப் பாடல்களில் சனங்களின் பாடுகள் நிரம்பியிருக்கின்றன.

நம் விடுதலைப் பாடல்களில் நமது குருதியும், கண்ணீரும் நிறைந்திருக்கின்றன.

நம் விடுதலைப் பாடல்களில் நமது நேற்றைய வாழ்வு நீறு பூத்திருக்கின்றது.

நம் விடுதலைப் பாடல்களில் நமது நிலம் நனைந்திருக்கிறது.

- தீபிகா-
19.05.2019