முன்னாள் போராளிகள் மீது பழிபோட்டுத் தப்பிக்கும் திட்டத்துடன் நடந்த வவுணதீவில் சிறீலங்காக் காவல்துறையினர் கொலைகள்!

வியாழன் ஜூன் 20, 2019

வவுணதீவு சோதனைச் சாவடியில் சிறீலங்காக் காவல்துறையினர் இருவர்,கடந்த ஆண்டு நவம்பர் 29ம் திகதி, குத்தியும், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில், முன்னாள் போராளி ஒருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். எனினும் ஏப்ரல் 21 உயிர்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இந்தப் படுகொலையை மேற்கொண்டவர்கள் தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தற்கொலைதாரி சஹ்ரான் ஹா´மினின் முக்கிய சகாக்கள் எனக் கண்டறியப்பட்டது.

111

இந்தச் சம்பவம் தொடர்பாக ஏப்ரல் மாதம் 27ம் திகதியன்று சஹ்ரானின் சாரதியான முஹமது சரீப் ஆதம்பாலெப்பை கபூர் (வயது 54), கம்சா முகைதீன் இம்ரான் (வயது 31) முஹமது ஆசிம் சியாம் (வயது 34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களாவர்.   

கைது செய்யப்பட்ட அந்த மூவரும், விசாரணைகளின் பின்னர் எவ்வாறு இந்தக் கொலைகளை மேற்கொண்டனர் என்பதை அறிந்துகொள்வதற்காக கொழும்பிலிருந்து கொலை செய்யப்பட்ட வவுணதீவு சோதனைச் சாவடிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு அக்கொலைகள் குறித்து செய்முறை விளக்கமளித்தனர்.

இதன்போது அம் மூவரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது பழி ஏற்படும் வகையில் எவ்வாறு திட்டமிட்டு இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர் என்பதை விளக்கியதுடன், அந்தப் படுகொலையை எதற்காக, எவ்வாறு நடத்தினார்கள் என்பதையும் விளக்கியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாக இந்த விசாரணையில் பங்கேற்ற சிறீலங்காக் காவல்துறை உயரதிகாரியயாருவர் தெரிவித்ததாவது, திஹாரியில் வேலை ஒன்று இருக்கின்றது.அதற்கு ரி,56 ரக துப்பாக்கிகள் தேவை. எனவே, அதனை எடுக்குமாறு வவுணதீவு காவல்துறையினர் கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர், சஹ்ரான் கட்டளையிட்டிருந்தார்.

வவுணதீவு சம்பவம் இடம்பெறுவதற்கு, 3 தினங்களுக்கு முன்னர் கொழும்பில் வைத்து கபூரிடம் ரி, 56 ரக துப்பாக்கியை கொடுத்த சஹ்ரான், அவரை கொழும்பு ;அக்கரைப்பற்று பேருந்தில் ஏற்றி அனுப்பியுள்ளார்.

கபூர் காத்தான்குடியில் வந்திறங்கியபோது அவரை ஏற்றிச் செல்வதற்கு கார் ஒன்று ஆயத்தமாக இருந்தது. அதிலேறிய கபூர், ஒல்லிக்குளம் பகுதிக்குச் சென்று, அங்கு அந்த துப்பாக்கியை மறைத்து வைத்துள்ளார்.   

வவுணதீவு சம்பவம் இடம்பெறுவதற்கு 3 கிழமைக்கு முன்னர் நில்கான், இம்ரான் மற்றும் சியாம் ஆகியோர் உன்னிச்சை பகுதியிலிருக்கும் கபூரின் நண்பனின் வாடிக்கு (கொட்டகை) சென்றுள்ளனர். இதன்போது வவுணதீவு வலையிறவு பாலத்தில் காவல் சோதனைச்சாவடியில் காவல்துறையினர் இருப்பதை அவதானித்தனர்.

இதனையடுத்து இந்த சோதனைச் சாவடியை தெரிவு செய்துள்ளனர்.  

நவம்பர் 29ம் திகதியை தெரிவு செய்தனர். ஏனென்றால் 27ம் திகதி விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் ஆகும். அதன் பின்னர் காவல்துறையினரைக் கொன்றால் அது புலிகளின் முன்னாள் போராளிகள் மீது பாதுகாப்பு படையினர் முழு சந்தேகமும் ஏற்படும்.எனவே, தங்கள் மீது ஒரு துளிகூட சந்தேகம் ஏற்படாது என்பதற்காக இந்த இடம் மற்றும் திகதியைத் தெரிவு செய்தனர் என்றார்.   

அன்றையதினம், முஹமது ஆப்தீன் நில்கான் தலைமையில் இந்தத் தாக்குதலுக்கு, ஒல்லிக்குளம் பகுதியில் அமைந்திருந்த முகாமிலிருந்து கபூரும், நில்கானும் சூட்டிபப் ரக உந்துருளிகளில் ரி, 56 ரக துப்பாக்கியும் மாடு அறுக்கும் கூரிய கிறிஸ்ரக கத்திகளையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து நள்ளிரவு 1 மணிக்கு வெளியேறி காத்தான்குடி பகுதிக்கு வரும்போது இடையில் காத்திருந்த இம்ரானை ஏற்றிக் கொண்டனர்.   

கல்லடி பாலத்தின் வாவிக்கரை வீதி ஊடாக பயணித்த உந்துருளிகள், மட்டு காவல் நிலையத்துக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பெற்றோலை நிரப்பிக்கொண்டு ஏறாவூர் செங்கலடி சந்திக்குச் சென்று அங்கிருந்து பதுளை வீதி ஊடாக கரடியனாறு, ஆயித்திமலைக்குச் சென்றுள்ளது.   

அங்கிருந்து வவுணதீவு காவல் நிலையத்துக்கு முன்னாள் உள்ள சந்திக்குச் சென்று அங்கு காவல் சோதனைச் சாவடிக்கு சென்றுள்ளது. அப்போது, சோதனைச் சாவடிக்கு முன்பாக நடுவீதியில் நின்றுள்ளனர்.

இந்த நிலையில், வழமையாக மாடு ஏற்றும் தொழிலில் ஈடுபட்டுவந்த முஹமது ஆசீம் சியாம், மாடு ஏற்றும் பாரவண்டியுடன் சென்று காவல் சோதனைச் சாவடிக்கு அருகாமையில் அன்றையதினம் நின்றிருந்தார்.

பாரவண்டியில் சியாம் காத்திருந்துள்ளார். இந்த நிலையில், வேவு பார்ப்பதற்கு சோதனைச் சாவடிக்கு அருகில் சென்று திரும்பி வந்த இம்ரான், காத்திருந்த நில்கான், கபூர் ஆகியோரிடம் இரு காவல்துறையினர் நிற்பதாகத் தெரிவித்துள்ளளார்.   

அப்போது பாரவண்டியைச் சோதனைச் சாவடிக்கு அருகில் கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டனர். அந்த பார வண்டியிலிருந்து சியாம் இறங்கியதும், அந்தப் பாரவண்டி வவுணதீவு பிரதேசத்தை நோக்கிச் சென்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் மற்றுமொரு உந்துருளி அப்பகுதியூடாக வந்து கொண்டிருந்துள்ளது. அது மட்டக்களப்பு பகுதியை நோக்கி செல்லும் வரை சகலரும் காத்திருந்தனர்.  

அதன் பின்னர், உந்துருளிகளில் நான்கு பேரும் சோதனைச் சாவடிக்கு அருகில் சென்று அங்கு உந்துருளிகளை நிறுத்திவிட்டு கபூரும், இம்ரானும் காவல் உத்தியோகத்தரான கணேஸ் தினேஸ்க்கு (இவரொரு தமிழர்) அருகில் சென்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இருட்டான பகுதியில் நில்கானும் சியாமும் சென்று நின்றிருந்தனர். இதன்போது சோதனைச் சாவடியின் உட்பகுதியில் காவல்துறை சார்ஜனான நிரோசன் இந்திர பிரசன்னா நித்திரையில் இருந்துள்ளார்.   

இந்தவேளை, நள்ளிரவு 2.40 மணிக்கு தினேஸ் உடன் இம்ரான் நன்றாக கதைத்துக் கொண்டிருந்த போது அங்கிருந்து கபூரும் இருட்டில் பதுங்கிருந்த நில்கானும் சோதனைச் சாவடி உள்பகுதில் படுத்திருந்த காவல்துறை சாஜன் இந்திக பிரசன்னாவின் முகம், கழுத்து பகுதியை வலையால் மூடினர். அப்போது, கத்தியால் கபூர் குத்தியுள்ளார். அவ்விருவர் மீதும் காவல்துறை சாஜன் திமிறியபடி உதைத்துள்ளார்.  

இதன்போதே, வெளியிலிருந்த காவலர் தினேஸ்க்கு சத்தம் கேட்டுள்ளது. அவர் தன்னை ஆயத்தமாகி கொள்வதற்கு இடையில் அவரை லெக்போட்டு இம்ரான் பிடித்துக்கொண்டார். கத்தியால் சியாம் வெட்டியதையடுத்து அவர் கீழே வீழ்ந்து மயங்கியுள்ளார்.

111

இதன் பின்னர், காவல்துறை சாஜன் பிரசன்னாவை குப்புற போட்டுக்கொண்டு, நில்கான் கொண்டு சென்ற ரி,56 ரக துப்பாக்கியால், அவர் மீது இரண்டு தடவைகள், சுட்டுள்ளார். அதன்போது கபூர் அவர் மீது கத்தியால் 9 தரம் குத்தியுள்ளார். பின்னர் மயங்கிக் கிடந்த காவல்துறையினன் தினேஸின் இரண்டு கைகளையும் பின்னால் வைத்து கட்டிப்போட்டு அவர் மீது கத்தியால் தாக்குதல் நடாத்திவிட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.  

அதன்பின்னர் உடனடியாக காவல்துறையினரிடம் இருந்த கை துப்பாக்கிகள் இரண்டையும் எடுத்துக் கொண்டு வவுணதீவு ஊடாக கொக்கட்டிச்சோலை சென்று அங்கிருந்து மண்முனை பாலத்துக்கு
சென்றுகொண்டிருந்தபோது, ஒரு உந்துருளியின் சக்கரத்தின் காற்றுப் போயுள்ளதையடுத்து அதனை உருட்டிக் கொண்டு ஒல்லிக்குளப்பகுதியில் அமைத்திருந்த முகாமுக்கு சென்றனர்.  

அங்கிருந்து காவல்துறையினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கைத் துப்பாக்கி ஒன்றை நிந்தவூர் பகுதியில் புதைத்து வைத்ததுடன் மற்ற கைத் துப்பாக்கி உட்பட 6 கைத் துப்பாக்கிகளையும் புத்தளம் பகுதிக்கு எடுத்துசென்ற கபூர், அங்கு புதைத்து வைத்துள்ளார் என்று அந்தக் காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

இதே வேளை, இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்திய ரி,56 ரக துப்பாக்கியை சஹ்ரானின் தம்பியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அதன் பின்னர் சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த ஒருவரின் கைகளில் இருந்து அந்தத் துப்பாக்கியைப் படையினர் மீட்டுள்ளனர் என சி.ஐ.டி னரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.  

இதேவேளை, இந்தத் திட்டத்துக்கு தலைமை தாங்கிய நில்கான், சவூதி அரோபியாவுக்குச் செல்வதற்கான, விசா, விமான சீட்டு என்பவற்றை ஏற்கனவே ஒழுங்குபடுத்திவிட்டு வந்திருந்தமையால், தாக்குதல் நடத்தியகையுடன், சவூதி அரோபியாவுக்கு அவர் உடனடியாகத் தப்பிச் சென்றார். நில்கானை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர் எனத் தெரிவித்த சி.ஐ.டியின் அதிகாரி ஒருவர், அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான இராஜதந்திர நடவடிக்கையில் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

நன்றி: ஈழமுரசு