முறிந்தும் முறியாத பனைமரங்கள்!

ஞாயிறு டிசம்பர் 08, 2019

‘நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது.’
 -தமிழீழ தேசியத் தலைவர்-

தமிழீழ தேச விடுதலை சுதந்திர இலட்சியத்தின் விடிவிற்காகவும் விடுதலைக்காகவும் மாவீரர்கள் செய்திட்ட தியாகங்களில்தான் எத்தனை எத்தனை பரிமாணங்கள். விடுதலைப் போராட்டத்தை முடக்கிப்போட நினைத்து உலக வல்லரசு நாடுகள் கூட்டாக நின்றபோதும் தாயக விடுதலை என்ற ஒற்றை இலட்சியத்திற்காக தரையில், கடலில், வான்
வெளியில் களமாடி சாவிலும் சரித்திரம் படைத்தவர்கள் எம்மாவீரர்கள்.

உலகம் முழுவதிலும் இன்று ஈழத்தமிழர்கள் பரவிவாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழீழமே ஆகும், மானுடச் சமூகம் தோன்றிய காலத்திலிருந்தே எமக்கென்று ஒரு தாய்மொழி, தாய் நிலம், தனித்துவக் கலை, பண்பாட்டு விழுமியங்கள், வேளாண்மை, வாழ்வியல், அறிவியல் என அனைத்திலும் வாழ்ந்தார்கள். சொல்லில் மட்டுமல்ல வாழ்வியல் சமூக பண்பாட்டிலும் ஒரு வரையறை ஒழுங்கைபின் பற்றி தன்னிறைவான வாழ்வை வாழ்ந்து வருபவர்கள் தமிழர்கள்.

தமிழர் சிந்தனையில், கலையும், ஆய்வும், பண்பாடும், நாகரீகமும், மொழியும், மருத்துவமும் காதலும், வீரமும் தமிழர் பண்பாட்டின் அடிப்படை உயிரையும் உடமையையும் காக்கும் வீரமறவர்களைப் போற்றுவதும் சமூகம் என்ற சேர்ந்து வாழும் பண்பாட்டின் அடையாளமாக தமிழர் தம் வாழ்வியல் கோட்பாடாகவே இன்றும் கைக்கொள்கின்ற நிலையிலும் ஓர் இனத்தின் இருப்பையும் அடையாளத்தையும் அழித்து தமிழர் சக்திவலுவற்றதாய்ச் செய்திட பல நூறாயிரத்திற்கும் மேல் தமிழர்களின் உயிர் குடித்து இனவழிப்புச் செய்து வருவதே மிகப்பெரிய காரணம் என்பதை யாருமே மறுக்கமுடியாது.

தமிழரின் வாழ்வும் வளமும் சிதைந்து அதியுச்ச ஒடுக்குமுறையின் கொடுமைகளுக்கு உள்ளாகி 2009ல் முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாகத் ஒரே நாளில் பல்லாயிரக் கணக்கானவர்கள் படுகொலைசெய்து அழிக்கப்பட்டார்கள்.

அதன் தொடர்ச்சியாகப் படுகொலைகள் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. சர்வதேச கண்ணோட்டத்துக்கும் மத்தியில் வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இறுதியில் முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே ஒன்றுதிரட்டி ஓர் இனத்துக்கு எதிரான மனித மீறல்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களாளும் அடக்குமுறையாளர்களாளும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது ‘மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்தது’ போன்று இன்று ஈழத்தில் எம் உறவுகள் நிர்க்கதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை.

விழுதெறிந்து விருட்சமாகும் ஆலயமான மாவீரர் துயிலும் இல்லங்களை சிங்கள அரசு இடித்துத்தரைமட்டம் ஆக்கியுள்ளது. ஆலயங்களை இடித்து நிர்மூலம் ஆக்கினால் சாமி இல்லைஎன்று ஆகிவிடுமா என்ன? எங்களின் போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியதெய்வங்கள் அவர்கள். அவர்களை யாராலும் இலகுவில் அழித்திட முடியாது.

போருக்கு முன்னரும் பின்னரும் நிகழ்ந்திடும் வலிந்துகாணாமல் ஆக்கப்படல், பயங்கரவாதப் பிரிவின் கைதும்,  பெண்களுக்கெதிரான வன்முறைகளும், மனித உரிமை மீறல்கள், அதிகரித்துவரும் சமூகக்குற்றங்கள் போன்றவை ஐ.நாவின் தேவையை இன்னும் வலியுறுத்திக்கொண்டே உள்ளது.

ஈழத்தில் எங்கள் உறவுகள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்ற பொய்யான நிலையைப் பரப்புகின்றவர்களும் எங்கள் மத்தியில் வாழ்கின்றார்கள் என்பதை யாராலும் மறுக்கவும் மறைக்கவும் முடியாத உண்மை.

முப்பது வருடங்களாக தமிழ் மக்கள் அரசியல் உரிமைகளுக்காக ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார்கள். இன்று யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் யுத்தத்தின் பாதிப்புக்களை இன்றும் வடகிழக்கில் இருந்துவரும் செய்திகள் உறுதிசெய்கின்றன.

தற்போது சமுகத்தில் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளாலும் உளரீதியாகப் பாதிக்கப்படுபவர்கள் அதிகம். இதில் ஆண்களைவிட பெண்கள் அதிகமான அச்சம், பதட்டம், வியர்த்தல், நித்திரை குறைவு போன்ற பதகளிப்புநிலையில் வாழ்வதாக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகிறது.

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் புலம்பெயர் ஈழத்தமிழராக தமிழீழம் என்ற பாதையில் நாம் எந்த இடத்தில் நிற்கின்றோம் என்பதற்கு முன்னாள் போராளிகளும் அவர்களின் வாழ்வும் பெரும்சாட்சி. முன்னாள் போராளிகளில் பெண் போராளிகள் சமூக ஒருங்கிணைப்பிலிருந்தும், அரசியல் தளத்தில் இருந்தும் ஓரங்கட்டி அரசபடைகள் விசாரணை, வன்முறை நெருக்கீடு, தொடர் கண்காணிப்பு, அடக்குமுறை என அரசியல், பொருளாதார, சமூகரீதியில் பெரும் பதற்றத்தையும் உண்டாக்கி வருகின்றார்கள்.

முன்னாள் போராளிகளில் குறிப்பாக பெண்களைத் தனித்தனியாக அணுகி, அவர்களது தேவைகளைக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு வழிகாட்டி, அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த உறவினர்கள், சமுகத்தவர்கள் மற்றும் நிரந்தர வாழ்வாதாரத்தில் முக்கிய கவனம் செலுத்தி அவர்களது பிரச்சினைகளிலிருந்து மீட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திட புலம்பெயர் சமூம் தவறியுள்ளது என்றால் தவறில்லை.

உரிமைப் போர்க்களத்தில் ஆக்கிரமிப்புப் படைகளை தாய்நிலத்தில் இருந்து விரட்டியடிக்க களமாடிய எண்ணற்ற சாதனை வீரமறவர்கள் செங்குருதி சிந்தி வரலாற்றை நிலைநிறுத்தி நிமிர்ந்து தன்மானத்தோடு வாழ்வதற்கு நின்றவர்களில் பெண்களும் உண்டு. இத்தகைய புரட்சிப் பெண் போராளிகள் பலர் உலகப் பெண்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்கின்றனர்.

அந்தவகையில் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் பெண்ணாக எம்மால் சாதிக்க முடியும் என்ற நேர்கொண்ட பார்வையுடன் மனித உரிமைக்காக அடக்குமுறையை எதிர்த்து நாம் போராட வேண்டிய தேவை உள்ளது.

புலம்பெயர்தலுக்குப் பல்வேறு காரணிகள் இருக்கின்றபோதிலும் எமது சமூகத்தின் ஆரோக்கியமான அரசியலிற்கு அத்திவாரமிடும் அறிவார்ந்த தைரியமான தலைமுறையாக பரிணமித்து எமது மக்களின் எதிர்காலத்தை நல்வழியில் கொண்டு செல்ல புலம்பெயர் தேசத்தில் பிறந்துவளர்கின்ற இளைஞர்களாக தாயகம் குறித்த புரிதல் என்ன?

முதலில் அவற்றைப் புரிந்திட தாய்த் தமிழை முறையாகக் கற்று கற்பிக்கும் முயற்சிகளில் முனைப்புடன் செயற்பட்டால் ஆற்றல் வாய்ந்த எழுச்சி, பண்பாட்டு மலர்ச்சி கொண்ட தலைமுறையாக வாழமுடியும்.

ஈழத்தமிழராய் உலகில் எங்கு வாழ்ந்தாலும் நாம்தமிழர், நமது மொழி தமிழ், நமது நாடு தமிழீழம், நமது தேசியக் கொடி புலிக்கொடி, நமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் என்பவை கர்வத்துடன் உரக்கச் சொல்வதில் பெருமைகொள்ள வேண்டும். தாய் மண்ணுக்கு உரமாக்கிய சரித்திர நாயகர்களின் வீரமும் தியாகமும் விதைக்கப்படும் தாய் நிலத்தில் நிச்சயம் வேரூன்றி விருட்சமாக எழுவார்கள்.

நிலத்திலும், புலத்திலும் தாயக இலட்சியத்தை ஈடேற்றும் வகையில் ஒற்றுமையாய், ஓரணியாக திரண்டிடும்போது தமிழீழம் மலரும், எமது மக்கள் விடுதலையைப் பெறுவார்கள்.
தமிழீழம் நோக்கி வீறுகொண்டெழுவோம்.

-நிலவன்-

நன்றி: ஈழமுரசு