முஸ்லிம் அரசியல்வாதிகளின் காலைக்கழுவி தீர்த்தமாக அருந்துக!

செவ்வாய் ஜூன் 04, 2019

2019 ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம் பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து முஸ்லிம் மக்கள் மிகப்பெரும் இடைஞ்சல்களை எதிர்கொண்டனர்.

அதேபோன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரும் குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் எதிர் விளைவைச் சந்தித்தனர்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் அத்துரலிய ரத்தின தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைத் தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிஙக கேட்டுக் கொண்டதான தகவல்களும் உண்டு.

இந்நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியல் பேதம் கடந்து தமது இனத்தின் ஒற்றுமை என்ற ஒரே இலக்குடன் சிந்தித்தனர்.

மூத்த அரசியல் தலைவர் பெளஸியின் வீட்டில் சந்தித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக ஒரு தீர்மானத்தை எடுத்தனர்.

அந்தத் தீர்மானம்;அமைச்சர்களாக,ஆளுநர்களாக,பிரதி அமைச்சர்களாக, இரா ஜாங்க அமைச்சர்களாக இருக்கின்ற
அத்தனை முஸ்லிம் அரசியல்வாதிகளும் அந்தந்தப் பதவிகளில் இருந்து இராஜினாமாச் செய்வது என்பதாக இருந்தது.

அந்த முடிவு நேற்று அரங்கேறியபோது இலங்கை அரசு அதிர்ந்து போனது.பெளத்த தேரர்கள் திகைத்து நின்றனர்.

இலங்கை ஆட்சியில், அரசாளும் நிர்வாகக் கட்டமைப்பில் அமைச்சர்களாகவோ,ஆளுநர்களாகவோ ஏன் பிரதி,இராஜாங்க அமைச்சர்களாகவோ ஒரு முஸ்லிம் இல்லை என்று வரலாறு பேசுமளவுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒற்றுமைப்பட்டு தம் இனத்தின் பலத்தை நிரூபித்துள்ளனர்.

இவ்வாறு முஸ்லிம் அரசியல்வாதிகள் எடுத்த அதிரடியான முடிவு இலங்கை அரசுக்கும் இலங்கையின் ஆட்சி நடைமுறைக்கும் பலத்த அடியாக விழுந்துள்ளது.

அத்துடன் பெளத்த தேரர்கள் அரசியலில் இறங்கி சிறுபான்மை இனத்தினர் அரசாட்சியில் பங்கேற்பதை வெட்டிச்சரிக்கின்றனர் என்ற கருத்துருவாக்கத்தையும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமை ஏற்படுத்திவிட்டது.

இதற்கு மேலாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை.

உங்களின் ஆதரவில் நாங்கள் பதவி வகிக்கவும் விரும்பவில்லை. எங்கள் இனத்துக்காக நாங்கள் எங்கள் பதவிகளைத் தூக்கி எறிவோம் என்பதையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் நிரூபித்தும் காட்டியுள்ளனர்.

அவர்களின் ஒற்றுமையைக் கண்டுணர்ந்து,எங்கள் தமிழ் அரசியல்வாதிகளை நினைத்த போது .......................... என்று சொல்லவே மனம் விரும்புகிறது.

(இந்த இடைவெளியில் நீங்கள் எந்தச் சொல்லை போட நினைக்கிறீர்களோ அந்தச் சொல்லைப் போட்டு உங்களை ஆற்றுப்படுத்திக் கொள்ளுங்கள்)

-நன்றி வலம்புரி-