முதல் நாளிலே அமெரிக்க அதிபரின் அதிரடி உத்தரவுகள்!

வெள்ளி சனவரி 22, 2021

அமெரிக்காவின் புதிய அதிபர் பதவியேற்பு விழா, வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக, பிரபல பாடகி லேடி காகா தேசிய கீதம் பாடினார். நடிகை ஜெனிபர் லோபசின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதன்பின் அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடனுக்கு, தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பைடன் 127 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட குடும்ப பைபிளை அவரது மனைவி ஜில் பைடன் கையில் பிடித்திருக்க, அதன் மீது ஆணையிட்டு பதவியேற்றுக் கொண்டார்.

இதேபோன்று அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரீஸ் பதவியேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சோடா மேயர் பதவிபிரமாணம் செய்து வைத்தார். அப்போது, சோனியா சோடா கமலா ஹாரீஸின் பெயரை தவறாக உச்சரித்தார்.

பின்னர் மீண்டும் கமலாவின் பெயரை சரியாக உச்சரித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அரசியல் அமைப்பை பாதுகாக்க சிறப்பாக செயல்படுவேன் என கமலா ஹாரீஸ் பைபிள் மீது கை வைத்து உறுதிமொழி ஏற்றார்.

பதவியேற்பு விழா முடிந்ததும் அதிபர் பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பைடன் தனது கன்னிப்பேச்சில், அமெரிக்க மக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது என்றார்.

நேரத்தை வீணடிக்காமல் நாட்டின் முன்னேற்றத்திற்கு பணியாற்ற விரும்புவதாகவும் குறிப்பிட்டார். இந்த கொள்ளை நோய் காலத்தை நாம் ஒரு தேசமாக நின்று எதிர்கொள்வோம் எனவும் பைடன் தெரிவித்தார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளின்டன், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் கரண்ஜித் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேநேரம் முன்னாள் அதிபர் டிரம்ப் புதிய அதிபர் பதவியேற்பு விழாவை புறக்கணித்தார்.

பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து அதிபரின் அலுவலகமான ஓவல் அலுவலகத்திற்கு ஜோ பைடன் புறப்பட்டார். அப்போது கண்கவர் அணிவகுப்பு மரியாதையுடன் அவரை ராணுவ வீரர்கள் வழியனுப்பினர்.

அதன்பின் வெள்ளை மாளிகைக்கு சென்ற பைடன் தனது பணியை தொடங்கினார். அப்போது, 2015 பாரிஸ் பருவ நிலை மாற்ற ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணைவது மெக்சிகோ நாட்டு எல்லையில் சுவர் எழுப்புவதை உடனடியாக நிறுத்தி வைப்பது, இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு மக்கள் வருவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம், பாலினம் மற்றும் இனவெறிக்கு எதிரான புதிய கோப்புகளில் பைடன் கையெழுத்திட்டார்.

மேலும், உலக சுகாதார அமைப்புடன் நல்லிணக்கம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 15 நிர்வாக உத்தரவுகள் மற்றும் இரண்டு வழிகாட்டு உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

கொரோனாவை கட்டுப்படுத்த அடுத்த 100 நாட்களுக்கு மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று வரும் நாட்களில் பல்வேறு நிர்வாக உத்தரவுகள் பிறப்பிக்க உள்ளதாக பைடன் அறிவித்துள்ளார்.