முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி வீரவணக்க நாள் இன்றாகும்

ஞாயிறு அக்டோபர் 10, 2021

 10.10.1987 அன்று யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் இந்தியப் இராணுவத்தினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்த நிலையில் ‘சயனைட்’ உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட அதே சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப். கஸ்தூரி, வீரவேங்கை தயா, வீரவேங்கை ரஞ்சினி ஆகிய மாவீரர்களின்   வீரவணக்க நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் இன்றாகும்.

1987 அக்டோபர் 10ம் திகதி நள்ளிரவில்…

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதலில் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது.

“நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ”

காயமுற்ற பின்னும் சுட்டுக் கொண்டிருந்தவர் இராணுவம் அதிகமாக நிற்பதைப் புரிந்து கொண்டார். தான் வீரச் சாவடைந்தாலுங்கூட, தான் நேசித்த ஆயுதம் எதிரியிடம் விடுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தன்னைப் பார்க்காமல் ஆயுதத்தைக் கொண்டு போகும் படி கூறிக் கொண்டிருந்தார். அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்துடன் ஊர்ந்து சென்ற விஜியிடம்,
 
“என்ர ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு ஆயதத்தைக் கொண்டுபோ”
 
எனச் சொல்லி ஆயுதத்தைக் கொடுத்தவர், கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டார். தமிழீழ போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி. அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது.