முதலமைச்சராக என்னை தேர்வு செய்தது சசிகலா அல்ல! அம்மாவின் ஆன்மா - முதல்வர்-

புதன் சனவரி 13, 2021

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், என்னை முதலமைச்சராக தேர்வு செய்தது சசிகலா அல்ல என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனினாமி 2017 பிப்ரவரியில் நிலவிய நெருக்கடி நிலைமை உங்களுக்குத் தெரியும். அந்த சூழ்நிலையில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னை விரும்பினார்கள் என்றும், அதனால் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஜெயலலிதா தன் மீது நல்ல நம்பிக்கை வைத்திருப்பதை அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அறிந்திருந்தனர் என்றும் கட்சி விவகாரங்களைப் பற்றி தனக்கு நன்றாகத் தெரியும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர் என்றும் கூறியுள்ளார்.

1989 ஆம் ஆண்டில் ‘சேவல்’ சின்னத்தில் (அதிமுக-ஜெயலலிதா அணி) போட்டியிட்ட தேர்தலில் முதன்முதலில் வெற்றி பெற்றதில் இருந்து, அம்மாவின் கடைசி நாள் வரை, அவருக்கும் கட்சிக்கும் விசுவாசமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒருபோதும் துன்பத்திற்கு இடமளிக்கவில்லை என்றும், கட்சி போராட்டங்களில் பங்கேற்றதற்காக ஏழு முறை சிறைக்குச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

தனது சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதியை கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கு 2001-ல் ஒதுக்கப்பட்டிருந்போது, ஜெயலலிதா தனக்கு  வழங்கிய பணியை மறுக்காமல் ஏற்று, கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக உழைத்ததாகவும் தெரிவித்த அவர், எப்போதும் கட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசமாக இருந்ததாகவும், எனவே அனைவருக்கும் என்மீது நம்பிக்கை இருந்ததால் தனக்கு இந்த முதலமைச்சர் வாய்ப்பு கிடைத்தது என்றும் தெரிவித்துள்ளார்.

என்னுள் இருக்கும் மாண்புமிகு அம்மாவின் ஆத்மா எனக்கு வழிகாட்டும்’ என்றும் அவரால் உருவாக்கப்பட்ட இந்த அரசு அதன் காலத்தை நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு அன்றே இருந்தது என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

2017 பிப்ரவரி 16ல் தான், முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, ​இந்த அரசாங்கம் 10 நாட்கள் கூட நீடிக்காது என்று சிலர் கூறினர். ஆனால் இப்போது இந்த அரசு நான்கு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அம்மாவின் அரசாங்கம் தொடர்ந்து மக்கள் நலத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது, என்றும், மேலும் மக்களின் நலனில் அக்கறை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இதனால் தமிழக அரசு கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு ஏராளமான விருதுகளைப் பெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில்  அம்மா கூறியது போல், அஇஅதிமுக அரசு மக்களின் ஆதரவோடு, இன்னும் பல நூறு ஆண்டுள் கடந்தும் மக்கள் சேவை புரியும் என்று கூறிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.