மூடநம்பிக்கையால் பெற்ற மகள்களை நரபலி கொடுத்த- படித்த பெற்றோர்கள்!

திங்கள் சனவரி 25, 2021

இன்றைய நவீன உலகத்தில் அறிவியல் மட்டுமே மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. ஆதிமனிதன் சிக்கிமுக்கி கல் மூலம் நெருப்பை உண்டாக்கினான், ஆனால் இன்றைய நாகரீக சமூகத்தில், சிக்கிமுக்கி கல் வைத்து,  நாம் நெருப்பை உண்டாகினால், நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோமோ அதே போல் தான் மூடநம்பிக்கை என்ற கொடிய பழக்கவழக்கம்.

மூடநம்பிக்கை என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தும் வகையில் ஆந்திராவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திராவில் படித்த பெற்றோர்களே, மூட நம்பிக்கையால் தங்களது மகள்களைக் கொன்றுள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வருபவர் புருஷோத்தம் நாயுடு - பத்மஜா தம்பதியினர். புருஷோத்தம் நாயுடு மதனபள்ளி மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும், அவரது மனைவி பத்மஜா ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களது மூத்த மகள் அலேக்யா (27) மேனேஜ்மென்ட் ஆஃப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் படித்து வந்தார். இரண்டாவது மகள் சாயி திவ்யா (22) ஏ.ஆர்.ரகுமான் இசை கல்லூரியில் படித்து வந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டுக்கு வந்த இவர்கள், மீண்டும் திரும்பிச் செல்லவில்லை. புருஷோத்தம் நாயுடு -பத்மஜா தம்பதியினர் வீட்டில் அற்புதங்கள் நிகழ்த்துவதாகக் கடந்த சில தினங்களாகப் பூஜை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தான் நேற்று இரவு மூட நம்பிக்கையின் உச்சமாக தங்களது மகள்களை நிர்வாணப்படுத்தி பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, உடற்பயிற்சி செய்யும் கருவிகள் மூலம் இரு மகள்களையும் அடித்துக் கொன்றுள்ளனர். மகள்களுக்கு மொட்டை அடித்து இருந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களது வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து வந்த காவல்துறை புருஷோத்தம் மற்றும் பத்மஜாவிடம் விசாரித்ததில், ஒரு இரவு பொறுத்திருங்கள் எங்கள் மகள்கள் உயிர்த்தெழுந்து வந்து விடுவார்கள் என கூறி அதிரவைத்துள்ளனர். அதோடு காவல்துறையினரும் உள்ளே செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.

அவர்களை மீறி உள்ளே சென்ற காவல்துறை உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகள்களை நரபலி கொடுத்ததாக இருவரும் ஒப்புக்கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சித்தூர் டி.எஸ்.பி. ரவி மனோகராச்சாரி கூறுகையில், இருவரும் நன்கு படித்துள்ளனர். மகள்களையும் நன்கு படிக்க வைத்துள்ளனர். ஆனால் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள். இதனால் வீட்டில் அற்புதங்கள், அதிசயம் நிகழும் என்ற எண்ணத்தில் இரு மகள்களையும் கொன்றுள்ளனர். 

இதனால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆயுள் கூடும் என்று நம்பியிருக்கின்றனர். அவர்கள் தங்களது மகள்கள் இறக்கவில்லை. உயிர்த்தெழுவார்கள் என்று கூறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, புருஷோத்தம், பத்மஜா இருவரையும் கைது செய்த காவல்துறை, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.