முத்துக்குமார் நினைவு நாளில் ஈழத் தமிழர்கள் இழந்த இன்னொரு பெரும் மனிதர்!

புதன் பெப்ரவரி 06, 2019

இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் தனது 88வது வயதில் கடந்த 29ம் திகதி காலமானார். ஈழத்தமிழர் இனப்படுகொலையைத் தடுக்க 2009ல் வீரத் தியாகி முத்துக்குமார் தீக்குளித்து மடிந்த அதே நாளில் ஜோர்ஜ் பெர்ணான்டஸ் அவர்கள் தன் மரணத்çத் தழுவிக்கொண்டிருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கப்படமுடியாத பெரும் மனிதர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள்.

இந்திய மத்திய அரசில் இந்திரா காந்தி அம்மையாருக்குப் பிறகு, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு நேரடியான ஆதரவை வழங்கியவர்களில் மிக முக்கியமானவர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் மட்டும்தான் என்றால் அது மிகையில்லை.

யார் இந்த ஜோர்ஜ் பெர்னாண்டஸ், ஈழத் தமிழர்களுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

கர்நாடக மாநிலத்தில் மத குருவாக பணியாற்றிய ஜோர்ஜ் பெர்னாண்டஸ் பின்னர் தொழிற்சங்கவாதியாக மாறினார். கர்நாடக மாநிலம் மங்களூரில் ஜோன் ஜோசப் பெர்னாண்டஸ்;ஆலிஸ் மார்த்தாவின் மகனாக 1930 யூன் 3ம் திகதி பிறந்த அவர் புரட்சிகர எண்ணங்களினால் தூண்டப்பட்டார். அதன் விளைவு தொழிலாளர்களுக்கு ஆதரவாகச் சங்கம் அமைத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.

இந்திராகாந்தி 1975ம் ஆண்டு அவசரநிலையை பிரகடனப்படுத்தியபோது அதை கடுமையாக எதிர்த்து போராடியவர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ்.

அந்தக் கால கட்டத்தில் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டன. அப்போது மக்களிடையே மக்களாக மீனவர் மற்றும் சீக்கியர் வேடத்தில் மாறுவேடத்தோடு சுற்றி அரசின் அடக்கு முறைகளை எடுத்துரைத்தார்.

எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடந்த மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் குஜராத் போன்ற இடங்களில் தலைமறைவாக செயல்பட்டு அரசுக்கு எதிராக குரல் கொடுத்தார். இதனால் அவசரகால நாயகன் (எமர்ஜென்சியின் ஹீரோ) என்றும் அழைக்கப்பட்டார்.

அத்துடன், இந்திய இளைஞர்களின் எழுச்சி நாயகனாக அப்போது உயர்ந்திருந்தார். இருப்பினும் 1976ம் ஆண்டு கொல்கத்தாவில் கைது செய்யப்பட்ட அவர், கை, கால்களில் விலங்கிடப்பட்டு சிறையில் காவல்துறையினரால் பெரும் கொடுமைக்கு உட்பட்டார்.

அந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது அந்த தேர்தலில் பிஹார் மாநிலத்தின் முசாபூர் தொகுதியில் போட்டியிட்ட ஜோர்ஜ் பெர்னாண்டஸ் 3.5 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெருவெற்றி பெற்றார்.

ஈழத் தமிழர்கள் இழந்த இன்னொரு...

அந்ததேர்தல் அடக்குமுறையின் தோல்விக்கான தேர்தலாக அமைந்தது. அதில் இந்திரா காந்தி தோல்வியைடந்து மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். தேசாயின் அமைச்சரவையில் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் தொடருந்துத்துறை அமைச்சர் ஆனார்.

அதோடு முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் உருவாக்கிய ஜனதாதளம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர், பின்னர் சமதா கட்சியை நிறுவினார். 1977 முதல் 2004ம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களிலும் வென்று மொத்தம் ஒன்பது முறை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இவர் பணியாற்றி உள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழகத்தை தளமாகக் கொண்டு ஆரம்பித்த நாளிலிந்து ஜோர்ஜ் பெர்னாண்டஸ் தன்னைப் போராட்டத்துடன் நெருக்கப்படுத்திக் கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இவரது வீடு புகலிடம் கொடுத்ததோடு 1988ம் ஆண்டில் இந்திய அமைதி படை, இலங்கையில் தமிழர் பகுதியில் நடத்திய படுகொலைகளை புகைப்பட ஆதாரங்களுடன் நூலாக வெளியிட்டார். இ

ந்திய அமைதிப்படை ஈழத்தில் நாடாத்திய படுகொலைகளை முதன் முதல் வெளி உலகத்துக்குக் கொண்டு வந்த பெருமை இவரைச் சாரும்.

இதுதான் தமிழ் மக்களுக்கும் அவருக்கும் இடையிலான உறவை மேலும் வலுவாக்கியது. இதனால் தமிழர்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பை பெற்றார்.

தமிழீழ விடுதலைக்கு ஆதரவு வழங்கிய தமிழகத் தலைவர்களான வைகோ போன்றவர்களுடன் இவர் தனது உறவை பலமாக வைத்துக்கொண்டார். தமிழர்களுக்கு மட்டுமல்ல ஜோர்ஜ் பெர்ணான்டஸ் இல்லம் திபெத் அகதிகளுக்கும் புகழிடமாக இருந்தது.
அடல் பிகாரி வாஜ்பாய் தலைமயிலான தேசிய முன்னணி அரசில் இரண்டு முறை (1998ம் ஆண்டு முதவ் 2004 வரை) பாதுகாப்பு துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

வாஜ்பாய் அரசில் பாகிஸ்தானுடன் கார்கில் போர் நடந்தபோது அதை முன்னின்று நடத்தி வெற்றிப் பெற்றுக்கொடுத்தவர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ். 1998ல் பொக்ரான் அணுகுண்டுச் சோதனை இவர் காலத்தில்தான் நடந்தது.

விடுதலைப் புலிகளுக்குச் சென்ற கப்பலை சர்வதேச கடலில் இந்தியக் கடற்படை தடுக்க முயன்றதை பெர்ணான்டஸ் கவனத்துக்குக் கொண்டுசென்றபோது, அதில் தலையிட்டு விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் சர்வதேசக் கடல் ஊடாக இலங்கையை சென்றடைவதற்கு இவரது உதவிகள் பேருதவியாக அமைந்தன.

யாழ்ப்பாணத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் இதோ கைப்பற்றி விடுவார்கள் என நம்பப்பட்ட காலத்தில், அப்போதைய சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இந்தியாவின் உதவியைக் கோரியபோது அதனை மறுத்து இந்திய இராணுவம் இனி ஒருபோதும் இலங்கை மண்ணில் கால் வைக்காது என உறுதியாக கூறியவர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ்.

விடுதலைப் புலிகளுக்கு இந்திய அளவில் தடை இருந்த போதும் உலகளவில் ஈழ ஆதரவு சக்திகளை ஒன்றிணைத்து டில்லியில் மாநாடு நடத்தி ஆதரவு கோரியவர்.  இவ்வாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆதரவுத் தூணாக நின்ற மிகப்பெரும் தலைவர் இவர்.  

தனது வாழ்க்கை முழுவதிலும் கொங்கிரஸ் எதிர்ப்பாளராகவே அரசியலை நடத்தியவர் அவர், கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டு, உடல்நலம் குறைந்து நினைவிழந்து போராடித் தன் உயிரைவிட்டிருக்கின்றார்.

ஆனாலும், இந்திய வரலாற்றில் மட்டுமல்ல ஈழத்தமிழர் வரலாற்றிலும் அழியாத நினைவுகளுடன் ஜோர்ஜ் பெர்ணான்டஸ் அவர்கள் நிலைத்து இருப்பார்.

நன்றி: ஈழமுரசு