மயான மேற்கூரை இடிந்து விபத்து 23 பேர் பலி- 15 பேர் படுகாயம் - உத்திரபிரதேசத்தில் நடந்த சோகம்!

திங்கள் சனவரி 04, 2021

உத்தரபிரதேச மாநிலம் முராத்நகரில், நேற்று ஜெயராம் (65) என்ற முதியவரின் உடல் தகனம் செய்யும்போது மயான சுவர் இடிந்து 23 பேர் பலியானார்கள், மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் அந்த சமயத்தில் பலத்த மழை பெய்ததால், அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஒதுங்கி நின்றனர். அப்போது அந்த கட்டிடத்தின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது, அதில் இருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

இந்த இடிபாடுகளில் சிக்கியவர்கள் பெரும்பாலானவர்கள் ஜெயராமின் உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டினர் ஆவார். சிக்கியவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு காசியாபாத்தில் உள்ள எம்.எம். ஜீ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மயான மேற்கூரை இடிந்து விழுந்ததில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் இழப்பீடும் அவர் அறிவித்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், தரம் குறைந்த கட்டுமானப் பொருட்கள் மூலம் கட்டிடம் கட்டப்பட்டதே இந்த சம்பவத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.