நாம் எமது காணி நில உரிமைகளை பெற பாதுகாக்க உறுதி பூண்டுள்ளோம்!!

புதன் டிசம்பர் 08, 2021

“எமது காணி,எமது உயிராகும்”தலைப்பில் கொழும்பு வெள்ளவத்தையில் நடைபெற்ற காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி, மக்கள் காணி ஆணைக்குழு கலந்துரையாடலில்,தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆற்றிய உரை வருமாறு,

மலையக மக்களுக்கு இரண்டு காரணங்களுக்காக காணி தேவை. ஒன்று, வீடு கட்டி வாழ காணி.அடுத்து, விளைநில வாழ்வாதார காணி.

முற்போக்கான இந்த செயற்பாட்டை இந்த, காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி செய்கிறது. பாராட்டுகள்.

நாம் முழுமையாக ஒத்துழைப்போம்.இலங்கையில் காணி நில உரிமை பிரச்சினைதான் எல்லா பிரச்சினைகளுக்கும் மூலம்.1964 சிறிமா சாஸ்திரி உடன்பாட்டில் இலங்கை இந்திய அரசுகள் மலையக மக்களை அரசியல்ரீதியாக பலவீனபடுத்தி விட்டன.

ஆனாலும், இலங்கை குடியுரிமை பெற்ற மலையக மக்களுக்கு, ஏனைய இலங்கையருக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க இலங்கை அரசு உடன்பட்டது.

ஆனால்,இன்று ஏனைய இலங்கையருக்கு உள்ள காணி உரிமை எங்களுக்கு மறுக்கப்படுகிறது.

வடகிழக்கில் 1958ன் பண்டா-செல்வா, 1965ன் டட்லி-செல்வா உடன்படிக்கைகளில் வழக்கு கிழக்கு மாவட்டங்களில் எப்படி காணி பிரித்து வழங்கப்பட வேண்டுமென விளக்கமாக கூறப்பட்டுள்ளது. ஆகவே, வடகிழக்கில் காணி வழங்கல் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமை உள்ளது.

1987ல்,வந்த 13ம் திருத்தத்தில் காணி உரிமை தொடர்பாக கூறப்பட்டுள்ளது.

ஆகவே இன்றைய அரசு தனது எதேச்சதிகார போக்கில் தமிழ் மக்களின் காணி உரிமைகளை மறுக்க முடியாது.நாம் எமது காணி நில உரிமைகளை பெற, பாதுகாக்க உறுதி பூண்டுள்ளோம்.