நான் எதற்கும் பயந்தவன் அல்ல;எமது கூட்டணியுடனும் இணையுங்கள்-சஜித்

செவ்வாய் ஓகஸ்ட் 13, 2019

நாட்டு மக்களுக்காகத் தமது தந்தையைப்போல் நடுவீதியில் உயிரைவிடவும் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தான் எதற்கும் அஞ்சாததால்தான் மக்களின் தோள்மீதேறி கூட்ட மேடைக்கு வந்ததாகக் குறிப்பிட்ட அவர், எதிர்வரும் நவம்பர் மாதம் தாம் போக வேண்டிய இடத்திற்குப் போவதாகவும் கூறியுள்ளார்.

அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ நேற்று பதுளையில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

“நான் எதற்கும் பயந்தவன் அல்லன். என்னுடனும், எமது கூட்டணியுடனும் இணையுங்கள் நாட்டை வெற்றியடையச் செய்யுங்கள். மக்கள் எமக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பது சுகபோகம் அனுபவிக்க அல்ல. நாட்டு மக்களைப் பலப்படுத்துவதற்கேயாகும்.

ஆங்கிலேயர்களைத் தோற்கடித்த இந்த ஊவா மண்ணிலிருந்து எமது புதிய பயணத்தை ஆரம்பிப்பதில் பெருமையடைகிறோம். நாங்கள் உருவாக்க நினைக்கும் புதிய பயணத்தில் 365 நாட்களும் நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு முக்கியத்துவத்தை வழங்குவோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அமைச்சர் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் இழுத்தடிப்புக்கும் இதுவே காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான தனது முதலாவது கூட்டத்தை சஜித் பிரேமதாச பதுளையில் நேற்று நடாத்தியுள்ளமை ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக நெருக்கடியை மேலும் அதிகரிக்கலாம் என அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.