நாங்குநேரி தேர்தல் மூலம் அதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும்!

புதன் அக்டோபர் 02, 2019

நாங்குநேரி இடைத்தேர்தல் மூலம் அ.தி.மு.க. ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கனிமொழி  . கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் முக்கியமான தேர்தல் ஆகும். வருகிற 2021-ல் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவார். அதற்கு முதல் படியாக நாங்குநேரி தொகுதி வெற்றி அமைய வேண்டும். இன்று அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய பல அமைச்சர்கள் வந்துள்ளார்கள். இதற்கு முன்பு இவர்கள் வந்தது உண்டா? பொதுமக்கள் பிரச்சனை என்றால் வராதா அமைச்சர்கள் இடைத்தேர்தல் என்றதும் வந்தள்ளனர். எப்படியாவது? காசு கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்றிடலாம் என நினைத்து மக்களை கொச்சைப்படுத்துகின்றனர்.

கருணாநிதி ஆட்சி காலத்தில் அவர் எந்த வெளிநாடுகளுக்கும் செல்லாமலேயே பல வெளிநாட்டு முதலீடுகள் தமிழ்நாட்டில் குவிந்தன. பல புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டது.

தற்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளார். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. ஆனால் எந்த முதலீடும் வரவில்லை.

மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு, ராமநதி, கடனாநதி, அடவிநயினார் ஆகிய அணைகள் கருணாநிதி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டவை. முத்தலாக் தடைச்சட்டம் மற்றும் மக்கள் உரிமைகளை பறிக்கக்கூடிய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றுகிறது. அதற்கு மாநில அரசு துணைபோகிறது.

நீட்தேர்வு, மோசடி தேர்வு என்ற நிலை உருவாகியுள்ளது. நாங்குநேரி இடைத்தேர்தல் மூலம் அ.தி.மு.க. ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் ஒரே நிலை இருந்த போதிலும் தமிழகம் தனித்து நிற்கும் என்று காட்டிய மாநிலம் இது. இவ்வாறு அவர் கூறினார்.