ஞாபகங்களில் எரியும் நூலக நெருப்பு!

வெள்ளி மே 31, 2019

யூன் 1 மலர்கிற நேரம்.
சரியாக இன்றைக்கு 38 வருடங்களுக்கு முன் 
ஒரு யாழ்ப்பாண நள்ளிரவு 
நெருப்பு பிழம்பால் நிரப்பப் பட்டிருந்தது.

ஈழத் தமிழரின் கல்விச் சொத்து 
கருகிப் போன காகிதங்களாய் வானில் பறந்தன.

ஊழித் தாண்டவமாடிய தீயின் கங்குகளில்
ஆசியாவின் மிகப் பெரிய நூலகம்
அனல் பூத்த தீக்காடாய் தகித்தது.

எங்கள் மூளையில் 
அந்த மிருகங்கள் நெருப்பு மூட்டியிருந்தன.

பார்த்துக் கொண்டிருக்க
சிறுகச் சிறுக கட்டிய
எங்கள் புத்தகத் தேன்கூடு
வதை வதையாய் சிதைந்து விழுந்தது.

ஈழத்தின் அறிவுச் சொத்து
எங்களை விட்டு
கறுப்புக் காகித இதழ்களாகி
வானுயர எழுந்து பறந்தன.

கேட்க யாருமற்ற ஒப்பாரிப் பாடல்களால்
யாழ்ப்பாணம் துக்கச் சுடுகாடாகியது.

எரிந்தன பொக்கிச நூல்கள்.
அழுதன அறிவுக் கண்கள்.

அந்த அவலச் செய்தி கொடுத்த
அதிர்ச்சி தாங்காமல்
பன்மொழிப் புலவர் அருட்தந்தை தாவீது அடிகளார்.
மாரடைப்பால் மாண்டு போனார்.

பதைபதைத்து விம்மியழுதன
பார்த்துக் கொண்டிருந்த யாழ்ப்பாண இதயங்கள்.

விடிய விடிய வானெழுந்து எரிந்த
புத்தகத் தீயில்
யாழ்ப்பாண வானம் இருண்டு போனது.

கருகி மணத்த காகித வாசத்தில்
ஒரு இனத்தின் வரலாறு
காற்றோடு கலந்து போனது.

வாசலில் கொலுவிருந்த 
வெள்ளைச் சரஸ்வதி
வெப்பத் தகிப்பில் வெந்து துடித்தாள்.

கல்வித் தாயை காப்பாற்ற முடியா
கனத்த சோகத்தில் 
கண்ணீரோடு மாணவ சமூகம் கதறியது.

இலங்கைத் தீபகற்பத்தின் நீண்ட கொடிய யுத்த வரலாற்றின் அழியா தழும்பாகி விட்ட இந்த மறக்கமுடியாத நூலக எரிப்பு நிகழ்வை இப்படி விவரிக்கிறார் ஆர்.முத்துக்குமார் என்கிற கட்டுரையாசிரியர்.

“ நூலகத்தின் மேற்கு மூலை பகுதிதான் முதலில் எரியத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நூலகத்தின் அடுத்தடுத்த பகுதிகளும் எரியத் தொடங்கின. நூலகம் எரிகிறது என்றால் புத்தகங்கள் எரிகின்றன என்று அர்த்தம். புத்தகங்கள் எரிகின்றன என்றால் தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகள் எரிகின்றன என்று அர்த்தம். செய்தி கேள்விப்பட்ட தமிழர்கள் பதைபதைத்தனர்.

நூலகத்தின் ஒவ்வொரு அங்குலமும் அழிந்துகொண்டிருந்தது. நூலகத்துக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 97000 நூல்கள் கருகிச் சிதைந்தன. மருத்துவம், இலக்கியம், ஜோதிடம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த நூல்கள், ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சாம்பலாகின. கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி, சி. வன்னியசிங்கம் நூற்தொகுதி, ஐசாக் தம்பையா நூற்தொகுதி, கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி, அமெரிக்காவில் இருந்து நன்கொடையாக வந்திருந்த நூற்தொகுதிகள் ஆகியன அழிந்து போன பொக்கிஷங்களில் அதிமுக்கியமானவை.
யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி தமிழர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது. செய்தியைக் கேள்விப்பட்ட பன்மொழிப் புலவர் தாவீது அடிகளார் அதிர்ச்சியில் மரணம் அடையும் அளவுக்கு இருந்தது யாழ் நூலக எரிப்பின் தாக்கம். நூலக எரிப்பை நேரடியாகப் பார்த்த பற்குணம் என்பவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. யாழ் நூலக எரிப்பு தமிழர்களின் மனத்தில் ஆற்றமுடியாத வடுக்களை ஏற்படுத்திவிட்டன. அந்த நூலகம் உருவான வரலாறு அப்படிப்பட்டது.

நூலகத்தை எரித்த நெருப்பு தமிழர்களின் நெஞ்சுக்குள் பரவியது. தங்களுடைய உரிமைக்குரலை உரத்து எழுப்பியது நூலக எரிப்புப் பிறகு என்றே சொல்லலாம். பாவத்துக்குப் பரிகாரம் தேடும் முயற்சியாக யாழ் நூலகத்தை மீண்டும் கட்டியிருக்கிறது சிங்கள அரசு. செங்கல். சிமெண்ட். மேசை. நாற்காலி. எல்லாம் புதிதாக வந்துவிட்டன, அழிந்துபோன அரிய ஆவணங்களைத் தவிர! “

ஆம்....

இப்படித்தான்
எங்கள் வாழ்க்கை மெதுமெதுவாக
அழிக்கப்பட தொடங்கியது.

இப்படித்தான்
எங்கள் இதயங்களில் புரட்சி விதைகள் தூவப்பட்டன.

இப்படித்தான்
எங்களை ஆயுதம் ஏந்த வைத்தது விதி.

இப்படித்தான்
எங்களை இனிமேலும் சேர்ந்து வாழ முடியாது என்கிற
முடிவெடுக்க நிர்ப்பந்தித்தார்கள் அவர்கள்.

இப்படித்தான்
எங்களை தனிநாடு கேட்க செய்தார்கள் அவர்கள்.

இன்று போல் தான் அன்றும்.
நீதிகேட்டு தட்டிய எந்தக் கதவுகளும்
ஈழத் தமிழனுக்காய் திறக்கப்படவேயில்லை.

எல்லோரும் பார்த்துக் கொண்டு
வரலாற்றின் மௌன சாட்சிகளாயினர்.

எந்தப் பாராளுமன்றங்களிலும்
எங்களுக்கான நீதியின் குரல்கள்
செவிசாய்க்கப்படாமலேயே போயின.

வண்ணக் கட்டிடத்தில் அந்த நூலகத்தை
இன்று மீள கட்டியெழுப்பிருக்கலாம்.

ஆனால்
வரலாற்றில் பூசப்பட்ட கரியின் கறைகளை
ஒருபோதும் அழிக்கவே முடியாது.

ஈழத் தமிழரை பொறுத்தவரைக்கும்
யாழ் பொது நூலக எரிப்பு என்பது
அவர்களின் மறக்க முடியாது வடு.

எங்கும் நாம்
கல்வியில் உயர்ந்தெழுவோம்.
பூமிப் பந்தின் சிகரெங்களெங்கும்
தமிழனின் சாதனைகள் பதிப்போம்.
வரலாற்றில் அழிக்கப்பட முடியாத
மானிட இனமாக என்றும்
ஈழத் தமிழினத்தை உயர்த்திச் செல்வோம்.

தீபிகா