நாற்சந்தி நயினார்!

வெள்ளி சனவரி 24, 2020

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டம்
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச்சட்டம் ஒருபோதும் தீர்வாக ஆகதென்று கூறித்தான் இந்தியா - சிறீலங்கா உடன்படிக்கையை தமிழீழத் தேசியத் தலைவர் ஏற்றுக்கொள்ள மறுத்தவர். வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தங்கத் தட்டில் வைத்து தலைவர் கையில் கொடுப்பதற்கு இந்தியா தயாராக இருந்தபோதும், அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து, விடுதலைக்காக போராடிச் சாவதே மேலென்று உலகின் நான்காவது வல்லரசையும் எதிர்ப்பதற்கு துணிந்து நின்றவர்.

ஆனால், இந்தப் 13வது திருத்தச் சட்டத்திற்கு இப்போது போட்டோ போட்டி நடக்கின்றது. பதவிக் கதிரைகளுக்காக கூட்டமைப்பு இந்தத் திருத்தச்சட்டத்திற்கு அலைகின்றது என்றால், ஜனநாயாக போராளிகள் கட்சியும் இந்த 13வது திருத்தச் சட்டக் குண்டுச் சட்டிக்குள்தான் குதிரை ஓடுவோம் என்று அடம்பிடிப்பதை என்னென்று சொல்வது?

தமிழர்களிற்கான இனப்பிரச்சினைக்கு 13வது திருத்த சட்டத்தை ஓர் அடிப்படையான தீர்வாக கொண்டு எதிர்காலத்தில் செயலாற்றுவது சிறந்ததென ஜனநாயாக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்தார்.

முன்னாள் போராளிகளை கொண்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளிற்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியா தனியார் விடுதியில் இடம்பெற்றதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதுசரி, உடையவன் இல்லையயன்றால் எல்லாம் ஒரு முழம் கட்டைதான்.

                                                        ()()()()()()()

எல்லாருக்கும் தலைக்கனம்

111
எல்லோருக்கும் முடிசூடிய மன்னர்களாக வலம்வரவேண்டும் என்பதுதான் ஆசை. இல்லாவிட்டால் சாகின்ற வயதிலும் பதவிக் கதிரையைக் கட்டிப்பிடித்துக்கொண்டு இருப்பார்களா என்ன..?

தமிழற்றை தலைமை யார் எண்டதிலை இப்ப எல்லாருக்கும் தலைக்கனம் பிடித்துவிட்டது.

உலகத் தமிழ் மக்கள் தமிழீழத் தேசியத் தலைவரை தங்கள் தலைவராக வரிந்துகொண்டது அவருடைய அர்ப்பணிப்புக்கள், செயல்களைப் பார்த்துத்தான். விடுதலைப் புலிகளின் தலைவர் என்று கையயாப்பங்களை அவர் இட்டிருக்கின்றாரே தவிர, ஒருபோதும் தமிழர்களின் தலைவர் என்று அவர் கையயாப்பமிட்டதும் இல்லை, நான்தான் தமிழர்களின் தலைவர் என்று அவர் கூறிக்கொண்டதும் இல்லை. ஆனால் இப்போது தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள்தான் தமிழ் மக்களின் தலைவர்கள் என்று வரிந்துகட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கின்றார்கள்.

இதில் ஒருபடி மேலே போய், தமிழ் அரசியல் தலைமையை தன்னிடம் தாருங்கள் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்திருக்கின்றார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால தலைவராக மாவை சேனாதிராஜாவை நியமித்து தமிழர்களுக்கு அவரைத் தலைமையாக்க வேண்டும் என்று வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் அவரை மன்னராக்கிப் பார்க்கத் துடிக்கின்றார்.

இவர்கள் இப்படியயன்றால், நாலைந்து வட்டங்களைக் கூட்டிவைத்து மாற்றுத் தலைமை நான்தான் என்று விக்கினேஸ்வரன் முழங்குகின்றார். புதுக்கட்சி தொடங்குகிறார். கூட்டமைப்பில் இருந்து விட்டுப்போனவர்கள் எல்லாம் ஓடிவாருங்கள் உங்களுக்கான கதவு திறந்திருக்கின்றது என்று கூட்டமைப்பின் அடுத்த தலைமை தான்தான் என்று கூவித்திரியும் எம்.ஏ.சுமந்திரன் கூவியழைக்கின்றார்.

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு முளைவிட்ட காளான்கள்தான் தமிழர்களுக்கு தலைமையயன்று, குடைபிடித்து நிற்பது தமிழர்களின் சாபக்கேடன்றி வேறென்ன? இவர்கள் எல்லாம் தமிழர்களுக்காக எதனைச் செய்து கிழிக்கப்போகின்றார்கள்?

அதுசரி, கூரையேறிக் கோழி பிடிக்க முடியாத இவர்கள் எல்லாம், வானமேறி என்ன வைகுண்டமா காட்டப்போகின்றார்கள்?

                                                                   ()()()()()()()

பிள்ளையானுக்கு விடுதலை

111
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் தடுத்து வைக்கப்பட்டிருக்க பிள்ளையானும்,அவற்றை எடுபிடிகளும் விரைவிலை சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கப்போகினம்.

குற்றச்சாட்டிலை சிறையிலை இருக்கிற பிள்ளையானை மகிந்த முதல் அமைச்சர்கள் வரை போய் அடிக்கடி சந்திச்சு ஆசீர்வாதம் வழங்கிவந்தவை. கோத்தபாய ஆட்சிக்கு வந்து மூன்றாவது நாளே விலங்குடைக்கப்படும் என்று உறுதி மொழியும் வழங்கினவை.

ஆனால், மூன்று மாதமாகியும் பிள்ளையானாலை வெளியை வரமுடியேலை. 2005ம் ஆண்டு நடந்த படுகொலைக்கு, மகிந்தவின்ரை ஆட்சி போனபிறகு, 2015ம் ஆண்டுதான் பிள்ளையானைக் கைது செய்தவை.

நாலு வருசத்துக்கு மேலையா பிள்ளையான் விசாரணைக் கைதியா இருந்தாலும், சிறைக்குள்ளையும் சிம்மாசன வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். மகிந்த முதல் பெரும் பெரும் தலைகள் எல்லாம் சிறைக்குள்ளை போய் சந்திக்கிற அளவுக்கு இராஜபோக வாழ்க்கைதான் அவருக்கு. வரப்போற தேர்தலுக்கு முன்னரே பிள்ளையானை வெளியகொண்டுவந்து பிரச்சாரத்தைத் தொடங்கவேணும் எண்டதுதான் இப்ப மகிந்தவின்ரை எதிர்பார்ப்பு.

அதுக்கு வசதியாய் இப்ப நீதிபதி வேற மாறப்போகின்றார். மாறப்போறாரா இல்லை மாத்தப்
போகினமோ தெரியேலை. ஆனால் அடுத்து விசாரணையை புதிய நீதிபதிதான் செய்யப்
போறார். பிறகென்ன பிள்ளையான் காட்டிலை மழைதான்.அவரை விடுவித்தால் அவரோட படுகொலையிலை சம்பந்தப்பட்ட எட்வின் சில்வா, கஜன் மாமா, சிங்கள இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) இவையளும் தங்களையும் விடுவிப்பினம் எண்ட நம்பிக்கையிலை இருக்கினமாம்.

அதுசரி, பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி கிடைக்குதோ இல்லையோ, கொலையாளிகளுக்கு விடுதலை கிடைத்துவிடும்.

நன்றி: ஈழமுரசு

111