நாடாளுமன்ற தேர்தல் முதலாவது முடிவு பிற்பகல் 2.30 மணியளவில் வெளியாகும் 

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

நடைபெற்று முடிந்த சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான வாக்குகள் எண்ணும் பணிகள்  தற்போது நாடு முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் நடந்து வருகிறது எனவும் இன்று (06) பிற்பகல் 2.30 மணியளவில் முதலாவது முடிவு வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறார் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இதேநேரம், இன்று நள்ளிரவுக்குள் இறுதி தேர்தல் முடிவுகளை வெளியிட முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் கூறினார். 

அனைத்து முடிவுகளும் 08 ஆம் திகதி சனிக்கிழமையன்று வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார். 

அதேநேரம் ஓகஸ்ட்- 09 ஞாயிற்றுக்கிழமைக்குள் சமர்ப்பிக்க வேண்டிய தேசியப் பட்டியல்கள் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.

மேலும் பொதுத் தேர்தல்கள் 2020 தொடர்பான அனைத்து வர்த்தமானிகளும் ஓகஸ்ட்-10 திகதி திங்கட்கிழமைக்குள் வர்த்தமானி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் நேற்று (05) இடம்பெற்ற 2020 பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 70 வீத வாக்குப் பதிவுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.