நாடாளுமன்றின் இரு சபைகளும் சுகாதாரச் சட்ட மூலத்துக்கு ஒப்புதல்!

புதன் ஜூலை 28, 2021

பிரான்ஸின் அரசமைப்புச் சபை ( Le Conseil constitutionnel ) அடிப்படை மனித உரிமைகளில் தீவிரமாகக் குறுக்கீடு செய்கின்ற மிக முக்கிய ஒரு சட்டமூலம் தொடர்பான தனது முடிவை எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி அறிவிக்கவுள்ளது.

கொரோனாத் தொற்று நோய் முகாமைத்துவம் தொடர்பான புதிய சுகாதாரக் கட்டுப்பாடுகளை வலுக்கட்டாயமாக மக்கள் மீது பிரயோகிக்க வழி சமைக்கின்ற ஒரு சட்ட வரைபை பிரான்ஸின் நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் கடந்த ஆறு நாட்கள் இரவு, பகலாக நீடித்த விவாதங்களுக்குப் பிறகு சட்ட மூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விவாதங்களின் போது எதிர்க்கட்சிகளது கடுமையான விமர்சனங்களை அரசு எதிர்கொள்ள நேர்ந்தது. நாடாளுமன்றத்தின் மேற்சபையான செனட் சபை சட்ட வரைவில் சர்ச்சைக்குரிய பல விதிகளை நீக்கியும் திருத்தியும் பரிந்துரைகளைச் செய்தபிறகு அதனை ஏற்றுக் கொண்டது.

சட்டத்துக்கு ஆதரவாக 156 வாக்குகளும்எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 14 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

அதிபர் மக்ரோன் ஜூலை 12 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் புதிய சுகாதாரச் சட்டத்தில் உள்ளடங்கியுள்ள சுகாதார நடைமுறைகளை வெளியிட்டிருந்தார். அதன் பிறகு அவை ஒரு சட்டவரைவாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

உணவகங்கள், சினிமா, மற்றும் தொழில் இடங்களுக்குள் செல்வதற்கு சுகாதாரப்பாஸைக் கட்டாயமாக்குதல்,பாஸ் நடைமுறைகளை மீறுவோருக்கு பெருந் தொகை அபராதங்களையும் தண்ட னைகளையும் விதித்தல், மருத்துவப் பணியாளர்கள் போன்ற சில தொழில்துறையினருக்கு வைரஸ் தடுப்பூசியைக் கட்டாயமாக்குதல், அதனை ஏற்க மறுப்பவர்களது ஊதியத்தை அல்லது வேலை யைப் பறித்தல் போன்ற பல தீவிரமான-அடிப்படை உரிமைகளில் குறுக்கீடு செய்கின்ற – விதிகள் புதிய சட்ட வரைவில் உள்ளடங்கியிருக்கின்றன.

சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து – “சுகாதார சர்வாதிகாரம்” என்று கோஷ மிட்டு – பல்லாயிரக் கணக்கான பொது மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதற்குமத்தியிலேயே அந்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறி உள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கையாளுகின்ற ஏனைய நாடுகள் எங்கேயும் அறிமுகப்படுத்தப்படாத – முக்கியமான – சர்ச்சைகள் மிகுந்த –ஒரு சுகாதாரச் சட்டம் இது என்று சிலர் இதனைக் குறிப்பிடுகின்றனர். அதனால்  அதன் மீது ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் கவனம் திரும்பி உள்ளது.ஏனையசில நாடுகளும் அதுபோன்ற சட்டங்களை அறிமுகம் செய்யத் தயாராகி வருகின்றன.

நடமாட்ட உரிமைகள் உட்பட அடிப்படை மனித உரிமைகளில் தீவிரமான தலையீடுகளைச் செய்கின்ற உத்தேச சட்ட மூலத்துக்கு நாட்டினது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்துள்ள போதிலும் அதற்கு மேலாக நாட்டின் அரசமைப்புச்சபையின் சம்மதம் கிடைக்கப் பெற்றாலே அது சட்டமாக முடியும்.அதன் முடிவுக்காக அதிபர் மக்ரோன் காத்திருக்க வேண்டி உள்ளது. புதிய சுகாதாரச் சட்டம் தொடர்பான தனது முடிவையும் பரிந்துரைகளையும் அரசமைப்புச் சபை (Le Conseilconstitutionnel) எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருந் தொற்று நோய்க் கால நெருக்கடிகளையும் அடிப்படை உரிமைகளையும்  எவ்வாறு எடைபோட்டு அரசமைப்புச் சபை அதன் அபிப்பிராயங்களை வெளி யிடவுள்ளது என்பதை அறியப் பலரும் காத்திருக்கிறார்கள்.