நாடாளுமன்றத்துக்குள் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா?

வெள்ளி அக்டோபர் 30, 2020

 நாடாளுமன்றச் செய்தியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டிருப்பதையடுத்து, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது ஊடகவியலாளர்களை அனுமதிப்பதா என்பதையிட்டு ஆராயப்பட்டுவருவதாகத் தெரிகின்றது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படும் செய்தியாளரிடம் இரண்டாவது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் பெறுபேறுகள் கிடைக்கப்பெற்ற பின்னரே இவ்விடயம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளையில் கடந்த வாரம் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் செய்திகளைச் சேகரிப்பதற்காகச் சென்றிருந்த நாடாளுமன்றச் செய்தியாளர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்றின் நாடாளுமன்றச் செய்தியாளர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பிட்ட செய்தியாளருக்கு கொரோனா இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக இரண்டாவது பரிசோதனை ஒன்றும் இடம்பெறவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.