நாட்டை அழிப்பதே பாஜகவின் நோக்கம்! ராஜஸ்தான் முதல் மந்திரி சாடல்-

திங்கள் சனவரி 04, 2021

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், போராடிவருகின்றனர். நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு அழைப்பு விடுத்தது.

ஜெய்ப்பூரில் உள்ள ஷாகீத் ஷம்ராக் பகுதியில் நடந்த போராட்டத்தி்ல் முதல்வர் அசோக் கெலாட்டுடன், மூத்த தலைவர் சச்சின் பைலட்டும் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் அசோக் கெலாட், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து 39 நாட்களாக போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு ஜடமாக இருக்கிறது, அவர்கள் தானாகவே சோர்வடையவார்கள் என்று எதிர்பார்க்கிறது, அதனால்தான் காலம் கடத்துகிறது.

மேலும் இப்போராட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் மட்டுமே போராடி வருகின்றனர் என்று மத்திய அரசு நினைக்கிறது, ஆனால் நாட்டின் 6.5 லட்சம் கிராமங்களிலிருந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.

விவசாயிகள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் தவறான எண்ணம் விரைவில் தெளிவாகும். இவர்களின் தலைவிதியை தீர்மானிக்க மத்திய அரசுக்கு உரிமையில்லை. மத்தியில் ஆளும் பாசிச அரசுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை எனவும் அவர்களுக்கு நாட்டை அழிக்க வேண்டும் என்பதே விருப்பம்.

நாட்டில் இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்காக பணியாற்றுகிறார்கள். காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவரும் விவசாயிக்கு ஆதரவாக நிற்க வேண்டும், தேவைப்பட்டால் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையின் பின்னணியில் காங்கிரஸ் உள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும். 

இவ்வாறு கெலாட் தெரிவித்தார்.