நாட்டு மாடுகளை இல்லாதொழிக்கும் சட்டத்தை  உடனே திரும்ப பெற வேண்டும் - வ.கெளதமன்

புதன் சனவரி 08, 2020

ஏறு தழுவுதல் (ஜல்லிக் கட்டு) உரிமைக்காக மாணவர்கள் இளைஞர்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழினமும் போர்க்கோலம் பூண்டு ரத்தம் சிந்தி பிரெஞ்சு புரட்சிக்கு இணையான "தைப்புரட்சி" ஒன்றை நடத்தித்தான் அதற்கான உரிமையைப் பெற்றோம்.

பெரும் வலி சுமந்து பெற்ற அந்த வெற்றிக்கு வேட்டு வைக்கும் விதமாக ஆளும் மத்திய அரசின் தூண்டுதலினாலோ அல்லது பீட்டா போன்ற அமைப்புகளின் பின்புல சூழ்ச்சியினாலே இன்று தமிழக அரசே நம் நாட்டு மாடுகளை நம் தமிழ்மண்ணிலிருந்து முற்றிலும் வேறறுக்கும் புதியதொரு கொடூர சட்டத்தை அமுல்படுத்தியிருப்பது வேதனையிலும் பெரும் வேதனை. உச்ச நீதிமன்றமும் , மத்திய மாநில அரசுகளும் கைவிட்ட நிலையில் அன்று மதுரை அவனியாபுரத்திற்கு சென்று போராட்டத்தை தொடங்கினோம். அரசும் காவல்துறையும் எங்களை கடுமையாக தாக்கியது. புறமுதுகு காட்டி ஓடாமல் ரத்தம் சொட்ட சொட்ட முன்னேறி போராடினோம். அதன் பின்பு நடந்தது உலகறியும். போராட்டத்தின் இறுதிநாள் வழியின்றி தவித்த அதிகாரவர்க்கம் எங்கள் தமிழர்களை அடித்துத்தான் உரிமையை தந்தது. அப்பொழுதுகூட அவர்கள் சட்டமியற்றினாலும் மக்கள் நம்பமாட்டார்கள் என முடிவெடுத்து பல்லாயிரக்கணக்கில் கூடி கடற்கறை போராட்டத்தில் நின்றிருந்த என்னையும் ஐந்து மாணவர்களையும் அழைத்து சட்டமன்ற மாடத்தில் அமர வைத்து சட்டமியற்றி எங்களின் மூலமாகத்தான் போரட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார்கள். ஊடகத்தை சந்திப்பதற்கு முன்பாக சபாநாயகர் மாண்புமிகு தனபால் அவர்களிடம் ஜல்லிக்கட்டுக்கான சட்டத்தில் ஏதோ ஒரு பின்னடைவு நேர்ந்தால் இப்போது நடந்த போராட்டத்தை விட மிகவும் உக்கிரமான போராட்டத்தை கையிலெடுப்போம் என சொன்னபோது ஆவணங்களோடு விளக்கி எங்களை சமாதானப்படுத்தினார். ஆனால் இன்று அதே சட்டமன்றத்தில் இயற்கை விவசாயத்தின் வேர்களான,  நம் நாட்டு மாடுகளை அடியோடு ஒழித்துக்கட்டும் இப்படி ஒரு சட்டத்தை (சட்ட நகல் இணைக்கப்பட்டுள்ளது) இயற்றி நடை முறைப் படுத்தியிருப்பது என்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும்
தமிழக அரசு செய்த மாபெரும் நம்பிக்கை துரோகம்.

Tamilnadu Jallikattu Bovine Breeding Act 2019

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு காளை இனவிருத்திச் சட்டம் பகுதி 12 இயற்கை முறை இனவிருத்தி சம்பந்தப்பட்ட்து. (Natural breeding Section)

1. (12-1) நாட்டின காளைகளுக்கு மட்டுமே இனவிருத்தி அனுமதிக்கப்படும்.

2. (12-2) இனவிருத்திக்கு தகுதியான காளைகளை வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் தங்களது காளையை பதிவு செய்ய வேண்டும்.

3. (12-3)  மேற்கண்ட முறையில் பதிவு செய்யப்பட்டது இரண்டு வருடம் மட்டுமே செல்லுபடியாகும். அது மட்டுமல்லாமல்
ஒவ்வொரு இரண்டு வருடமும் பதிவு செய்யப்பட வேண்டும் (புதிப்பிக்கப்பட வேண்டும்).

4. (12-7) காளைகளுக்கு குறிப்பிட்ட காலகட்ட்த்திற்கு ஒரு முறை மெடிக்கல் (Fitness) சான்றிதழ் பெற வேண்டும்.

5. (12-9) விவசாயி தனது காளைகளை வைத்திருக்கும் இடத்தினுள் எந்நேரமும் நுழைய அதிகாரிகளுக்கு உரிமை உண்டு. ((9) The person identified under sub-section (2) shall have power to enter the premise where the male bovine for natural service are reared for examining the animals for their breeding fi tness and compliance with this Act.

6. (12-10) இனவிருத்திக்கு தகுதியற்ற அல்லது நோய்வாய்ப்பட்ட காளையை அரசு அதிகாரி சொல்கிற விதத்தில் விவசாயி அழிக்க (கொலை செய்ய) வேண்டும். ((10) The male bovine declared unfi t for breeding or infected with disease shall be eliminated by the farmer in such manner as may be prescribed.

இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால், விவசாயி மாடு வளர்ப்பது கடினமாகும் அதிகாரிகளுக்கு விவசாயிகளின் வீடு, மாட்டுத் தொழுகை, தோட்டம் மற்றும் அனைத்து இடங்களிலும் நுழைந்து ஆய்வு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. காளை ‘தகுதியற்றது’ என்று கூறி மாட்டைக் கொல்லச் சொல்லும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளை அதிகாரிகள் எளிதில் துன்புறுத்த முடியும், லஞ்சம் பெருகும்.

இப்படிப்பட்ட ஒரு சட்டம் கொண்டுவந்ததால் கேரளாவின் நாட்டு மாட்டு இனங்கள் அனைத்தும்  அழிந்துவிட்டன. (The Kerala Live-Stock Improvement Act, 1961)
இதே சமயத்தில் மத்திய அரசும் தமிழக அரசும் ‘இனம் பிரிக்கப்பட்ட விந்து’க்களை பிரபலப்படுத்த துவங்கியிருக்கின்றன. (Sex selected semen)
இது பிரபலமானால் காளை (ஆண்) கன்றுகளே பிறக்காது.

காயடிக்காத நாட்டு மாட்டுக் காளைகளை வளர்க்க கட்டுப்பாடுகளை விதிப்பதால் விவசாயிகள் காளைகளை வளர்ப்பது படிப்படியாக குறைந்து முற்றிலும் அழிந்துவிடும்.
மறுபுறம் ஊசி போடப்படும் பசுக்களுக்கு காளை (ஆண்) கன்றுகளே பிறக்காது.பெண் கன்றுகள் மட்டுமே பிறப்பதற்கான விந்துக்களை விநியோகம் செய்வதே அவர்களின் சூழ்ச்சி.

சினை ஊசி வர்த்தகம் ஒரு சில நிறுவனங்களின் கைகளுக்கு போய்விடும். விவசாயிகளிடம் இருக்கும் கால்நடை (Gene-pool) அழியும்.
இன்று விவசாயிகள் விதைக்கு MNC நிறுவங்களை நம்பி இருப்பதைப் போல, இதனால், பசுமாடுகளுக்கு சினை ஊசி வாங்குவதற்கு விவசாயிகள் சில MNC நிறுவனங்களிடம் கையேந்த வேண்டும்.

ஒட்டு மொத்தமாக நாட்டு மாட்டின் இனங்களும் முற்றிலுமாக அழியும். இரண்டு விவசாயிகள் முதல்வர்களாக உள்ள தமிழக அரசு இப்படியொரு சட்டம் இயற்றியிருப்பது பேரதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இருக்கின்ற பேராபத்தை விளக்கி அரசின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கின்றோம். மீண்டும் இதற்கானதொரு உக்கிரமான போராட்டத்தை தவிர்த்து தாய் மனதோடு பரிசீலனை செய்து முற்று முழுதாக இச்சட்டத்தை திரும்பப் பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.