நாட்டுப்பற்றாளர் சின்னத்துரை கமலநாதன்

வியாழன் மார்ச் 21, 2019

தமிழீழத் தேசத்தின் விடுதலையை நேசித்து, ஜேர்மனிய மண்ணில் தமிழ்மொழிக்காகவும், தாய்மொழிக் கல்விக்காகவும் இவராற்றிய பணி மகத்தானது. புலம்பெயர் மண்ணில் தமிழ்மொழி நூலாக்கத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவர்.  இவ் அற்புத மனிதரை நாம் 09.03.2019 அன்று இழந்துவிட்டோம். புலம்பெயர் தேசத்தில் கல்விக்காக அயராது உழைத்த ஆன்மா அமைதியாகிவிட்டது.

தமிழீழம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி றைன என்னும் இடத்தை வதிவிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்துரை கமலநாதன் அவர்கள்  ஒரு தேசப்பற்றாளர். தமிழீழத் தாயகத்தில் ஆழமான பாசம்கொண்டவர். தமிழர் தேசம் தன்னாட்சி உரிமைபெற்று சுதந்திர நாடாக உருவாக வேண்டுமென ஆவல் கொண்டவர்.  தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும்,  இயக்கத்தின் கொள்கையையும் ஏற்றுச் செயலாற்றியவர்.  நேர்மைத் தன்மையுடனும்,  கனிவான பேச்சுடனும் அனைவரையும் அரவணைக்கும்  பண்பாளர். அன்னார்  தமிழீழ தேசத்திற்காக ஆற்றிய பணிகள் மதிக்கத்தக்கது.

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு உரமூட்டும் வகையில் தமிழர் வரலாற்றையும், தமிழீழப் பண்பாட்டு வடிவங்களையும் முன்நிறுத்தி தமிழ் மாணவர்களைத் தமிழ்க் கல்வியில் பற்றுமிக்கவர்களாக உருவாக்குவதற்கு  அமரர் கமலநாதன் ஆற்றிய பணி உன்னதமானது. புலம்பெயர்வாழ் இளைய தலைமுறையினரிடம் எமது தேசத்தின் வாழ்க்கை முறையையும், வெளிநாட்டு வாழ்க்கை முறையையும் வேறுபடுத்திக்காட்டி நம் எதிர்காலச் சந்ததி தமிழ்ப் பண்பாட்டுடன் வாழவேண்டும் என்ற எண்ணங்களை மாணவர்களின் ஆழ்மனதில் உருவாக்கியவர்.


“உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு அழித்துவிடுவதில்லை”  என்னும் கூற்றுக்கமைய,  புலம்பெயர்நாடுகளின் தமிழ்ப் பாட நூல்களில் மட்டுமல்லாது புலம்பெயர் வாழ் தமிழ் ஆசிரியர், மற்றும் மாணவர்கள் நெஞ்சங்களிலும் அமரர் கமலநாதனின் பெயர் நீக்கமற நிறைந்திருக்கும்.