நாடுகடத்தல்: வழக்கு விசாரணை டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

ஞாயிறு அக்டோபர் 20, 2019

ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படும் ஆபத்தில் சிக்கியுள்ள பிரியா- நடேசலிங்கம் தமிழ் அகதி குடும்பம் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை வரும் டிசம்பர் 16 நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பிரியா- நடேசலிங்கம் குடும்பம் மேலும் சில மாதங்களுக்கு கிறிஸ்துமஸ் தீவிலேயே வைத்திருக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

இக்குடும்பம் சார்பாக ஆஜராகும் குடியேற்ற வழக்கறிஞரான கரினா ஃபோர்ட், இறுதி விசாரணைக்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கிறிஸ்துமஸ் தீவில் இருப்பது மனரீதியான துன்புறுத்தலாக இருப்பதாகக் கூறியிருந்த பிரியா-நடேசலிங்கம் இணையர், அவர்களது குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்வதாக வேதனைத்  தெரிவித்திருந்தனர்.

கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு ஆஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன. 

ஆஸ்திரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர். அண்மையில், அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர், அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு சென்றது ஆஸ்திரேலிய அரசு.  

பிரியா, நடசேலிங்கத்தின் தஞ்சக்கோரிக்கைக்கான அத்தனை விதமான சட்ட வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், இரண்டு வயது குழந்தை தருணிகாவுக்கு பாதுகாப்பு விசா வழங்கப்பட்டால் இக்குடும்பம் ஆஸ்திரேலியாவில் வாழக்கூடிய சூழல் ஏற்படலாம்.