நாடுகடத்தலுக்கும், நுழைவனுமதி மறுப்பிற்கும் வேறுபாடு தெரியாது பொய்ச் செய்தி வெளியிட்ட ஐ.பி.சி – பாதிக்கப்பட்ட தமிழர் கண்டனம்!

செவ்வாய் ஜூலை 30, 2019

இலண்டனில் இருந்து தனது குடும்பத்துடன் கொழும்பு சென்ற பொழுது நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட கவிராஜ் சணமுகநாதன் என்ற முன்னாள் அரசியல் செயற்பாட்டளர் நாடுகடத்தப்பட்டதாக பொய்ச் செய்தி வெளியிட்டு புலம்பெயர் தமிழர்களின் அதிருப்தியை ஐ.பி.சி என்ற தனியார் ஊடகம் சந்தித்துள்ளது.

 

நேற்று 29.07.2019 திங்கட்கிழமை கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தை சென்றடைந்த கவிராஜ் சண்முகநாதன் அவர்களை நாட்டிற்குள் நுழைவதற்கு சிறீலங்கா குடிவரவுத் திணைக்களத்தினர் அனுமதி மறுத்துள்ளனர். எனினும் அவரது குடும்பத்தினர் நாட்டிற்குள் நுழைவதற்குத் தடையில்லை என்று குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதனையடுத்து தனது குடும்பத்தினரை நாட்டிற்குள் செல்ல விட்டு, பிறிதொரு விமானம் மூலம் சென்னைக்கு கவிராஜ் சண்முகநாதன் சென்று, அங்கிருந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து வருகின்றார்.

 

இந்நிலையில் கவிராஜ் சண்முகநாதன் பலமணிநேரம் கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பின்னர் அவர் நாடுகடத்தப்பட்டதாகவும் உண்மைக்குப் புறம்பான கற்பனைச் செய்தியை ஐ.பி.சி என்ற தனியார் ஊடகம் வெளியிட்டுள்ளது.

 

அத்தோடு பிரித்தானிய தமிழர்களின் முயற்சியை அடுத்து அவர் கைது செய்யப்படவில்லை என்றும் ஐ.பி.சி கதையளந்துள்ளது.

 

 

IBC Fake

IBC1

IBC2

 

உண்மைக்குப் புறம்பான முறையில் ஐ.பி.சி வெளியிட்ட இந்தச் செய்தி புலம்பெயர் தமிழர்களைக் கடும் அதிருப்திக்கு ஆளாக்கியிருப்பதோடு, இது பற்றிய தனது கண்டனத்தையும் தனது முகநூலில் கவிராஜ் சண்முகநாதன் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

 

Kaviraj

 

இது தொடர்பாக கவிராஜ் சண்முகநாதன் அவர்களுடன் இன்று அதிகாலை சங்கதி-24 இணையத்தின் பிரித்தானிய செய்தியாளர் தொடர்பு கொண்டு வினவிய பொழுது, பின்வருமாறு அவர் எமக்கு விளக்கமளித்தார்:

 

"நான் எனது குடும்பத்துடன் இலங்கை சென்றேன். கட்டுநாயக்கா விமான நிலையத்தில் எந்தப் பிரச்சினையும் இன்றி எனது மனைவி பிள்ளைகள் உள்நுழைய அனுமதிக்கப்பட்டார்கள். எனினும் எனது கடவுச்சீட்டை கணினியில் குடிவரவு அதிகாரி பதிவுக்கு உட்படுத்திய பொழுது எனது பெயர் தடைப்பட்டியலில் இருப்பதாக கணினித் திரையில் அறிவுறுத்தல் தோன்றியது. இதனையடுத்து என்னை நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதிக்க முடியாது என்று குடிவரவு அதிகாரி தெரிவித்தார்.

 

அப்பொழுது தடைப்பட்டியல் பற்றி நான் விசாரித்த போது, மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எனது பெயர் தடைப்பட்டியலில் இடப்பட்டதாகவும், அத்தோடு இலண்டனுக்கு மகிந்த ராஜபக்ச வந்த காலப்பகுதிகளில் அவருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது பி.பி.சிக்கு நான் வழங்கிய செவ்விகளையும் கோவை ஒன்றில் இருந்து அந்த அதிகாரி மேற்கோள் காட்டினார்.

 

மேலும் நான் நாட்டிற்குள் நுழைய விரும்பினால் இலண்டனில் உள்ள சிறீலங்கா தூதரகம் ஊடாக பாதுகாப்புத்துறை அமைச்சிற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் எனது விண்ணப்பத்தைப் பரிசீலித்து என்னை நாட்டிற்குள் அனுமதிப்பதா? இல்லையா? என்பதைப் பற்றி அவர்கள் தீர்மானிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

 

இதன் பின்னர் என்னை பிரித்தானியாவிற்கோ அல்லது வேறு ஏதாவது நாட்டிற்கோ திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். நான் எனது மனைவி பிள்ளைகளை நாட்டிற்குள் செல்லுமாறு கூறிவிட்டு சென்னைக்கு பயணச் சிட்டையைப் பதிவு செய்து அங்கு நோக்கிப் புறப்பட்டேன்.

 

ஆனால் இந்தத் தகவலை ஏதோ ஒரு விதத்தில் அறிந்து கொண்ட ஐ.பி.சி நிறுவனத்தினர் நான் நாடுகடத்தப்பட்டதாக பொய்ச் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். இது பற்றி அவர்களுடன் தொடர்பு கொண்டு எனது கண்டனத்தை நான் பதிவு செய்ய இருக்கின்றேன்."

 

இது இவ்விதம் இருக்க வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் சிறீலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக வெளியிட்ட எந்தத் தடைப்பட்டியல்களிலும் கவிராஜ் சண்முகநாதன் அவர்களின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.