நாவலப்பிட்டியவில் சாரதி உயிரிழப்பு! சந்தேக நபரொருவர் கைது!

வியாழன் ஜூலை 11, 2019

வான் ஒன்றுக்குள் சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டிய ரம்புக்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எம்.ஆர்.அசங்க பண்டார சமரதுங்க என்ற 36 வயதுடைய ஒருவரே வான் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முன்னதாக நேற்றைய தினம் சாரதியின் காரை செலுத்தி வந்த அவரது நண்பர், சாரதி போதையில் உள்ளதாக அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளதுடன், போதை தெளிந்ததும் அவரை எழுப்பி வீட்டுக்குள் அழைத்து செல்லுமாறு கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் சாரதி உறக்கத்திலிருந்து எழும்பாததால் சந்தேகம் ஏற்படவே அம்பியுலன்ஸ் சேவைக்கு அவருடைய தந்தை அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

அம்பியுலன்ஸ் வண்டி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வருகைதந்து பரிசோதனைகளை மேற்கொண்ட போது, குறித்த நபர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நாவலப்பிட்டிய  காவல் துறையினர் உயிரிழந்த நபரின் நண்பரை கைதுசெய்துள்ளனர்.