நாவற்குழியில் விகாரை திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சுமந்திரன்!

வெள்ளி ஜூலை 12, 2019

தமிழர் தாயகத்தில், தென்மராட்சிப் பெருமண்ணில், நாவற்குழியில் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரையின் திறப்புவிழாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார். 

நாளை சனிக்கிழமை (13) இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவை வழங்கியிருக்கின்றது. கூட்டமைப்பின் இந்தச் செயற்பாடு குறித்து தமிழ் மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துரோகத்தனமான அரசியலில் ஈடுபடுகின்றது என தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கூட்டமைப்புக்கு தாங்கள் தக்க பாடம் புகட்டவேண்டிவரும் எனவும் எச்சரித்துள்ளனர். 

நாவற்குழியில் சட்டவிரோத சிங்களக் குடியேற்றவாசிகளால் அமைக்கப்பட்ட இந்த விகாரைக்கு  நல்லிணக்க விகாரை எனப் பெயர் சூட்டி அதைத் திறப்பதற்கான ஏற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஈடுபட்டுள்ளது. 

கூட்டமைப்பின் தென்மராட்சி தொண்டர்களும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.சயந்தனும் இணைந்து மேற்படி பௌத்த விகாரைத் திறப்புவிழாவுக்குரிய ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். 

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அடிவருடிகளான இவர்கள், சுமந்திரனின் உத்தரவிற்கு இணங்க இந்தச் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரியவருகின்றது. 

தமிழர் தாயகத்தில் ஆயிரம் விகாரைகளை அமைப்பதற்கு கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 2900 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆரவை வழங்கியிருந்தது. 

இதன் அடிப்படையிலேயே திருகோணமலை கன்னியாய், முல்லைத்தீவு செம்மலை போன்ற இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் சிங்களப் பேரினவாதம் விகாரைகள் அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றது. 

ஏற்கனவே, சிங்கள மக்கள் அத்துமீறிக் குடியேறிய நாவற்குழியில் கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டபோது அதற்கு எதிராக சாவகச்சேரி பிரதேச சபை வழக்குத்தாக்கல் செய்திருந்தது. 

இதன் அடிப்படையில் குறித்த விகாரைக்கான கட்டுமானம் இடைநிறுத்தப்பட்டிருந்தது. பின்னர், சுமந்திரன் தலையிட்டு குறித்த வழக்கை வாபஸ் பெறுமாறு பிரதேச சபைக்கு தெரிவித்திருந்தார் எனவும் ஏனைய உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்படாமல் வழக்கு வாபஸ் பெறப்பட்டது எனவும் தெரியவருகின்றது. 

எனினும், தமிழ் மக்களினதும் தமிழ் அதிகாரிகளினதும் எதிர்ப்புக்களை மீறி அமைக்கப்பட்ட குறித்த பௌத்த விகாரை நாளை திறக்கப்படவுள்ள நிகழ்வுக்கு சுமந்திரன் செல்லவிருக்கின்றமை தொடர்பாக தமிழ் மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டிருக்கின்றனர். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தச் செயற்பாடு தமிழினத் துரோகம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தாங்கள் மன்னிக்கத் தயாராக இல்லை எனவும் தமிழ் மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.