நாய்க்கு வேலையில்லை: நிற்க நேரமும் இல்லை - பிலாவடிமூலைப் பெருமான்

செவ்வாய் பெப்ரவரி 04, 2020

வணக்கம் குஞ்சுகள்.
கொரொனா வைரஸ் கலக்கத்தில் நீங்கள் எல்லோரும் பதறிக் கொண்டு திரிகிறது எனக்கு விளங்குது.

உண்மையைச் சொல்லப் போனால் வைரஸ் காய்ச்சல் வந்திடும் என்ற பயத்தில் நானும் இப்ப கொஞ்ச நாளாக பிலாவடி மூலைப் பக்கம் போகிறதில்லை. அதைவிட இஞ்ச கனடாவில் சரியான குளிர். அது தான் பிரான்சுக்குப் போவம் என்று போன கிழமை உங்கே வந்திருந்தனான்.

ஆனால் உங்கே வந்தாப் பிறகு தான் எனக்கு விளங்கிச்சுது, கொரொனா வைரசை விட சில மோசமான மனிச வைரசுகள் உங்கே உலாவுதென்று.

பின்னை என்ன பிள்ளையள்? மனுசன் நிம்மதியாய் குளிர் காலத்தை பிரான்சில் கழிக்கலாம் என்று கனடாவில் இருந்து மினக்கெட்டு வெளிக்கிட்டு வந்தால், வந்ததும் வராததுமாய் வீட்டுக் கதவைத் தட்டிக் காசு பறிக்கிறதில் உங்கை இருக்கிற சில மனுச வைரசுகள் நிற்குது.

அண்டைக்கு அப்பிடித் தான்: ஒரு ஆம்பிளையும், பொம்பிளையும் எங்கடை மருமகனின்ரை வீட்டுக் கதவைத் தட்டிச்சுதுகள்.

நானும் ஆரோ என்னைப் பார்க்க வந்திருக்கிதுகள் என்று நினைச்சுக் கதவைத் திறந்தால், தாங்கள் இராசதந்திரப் போராட்டம் நடத்தித் தமிழீழம் அமைக்கிறதுக்கு நிதி திரட்டுகிறதாக சொல்லி என்ரை கழுத்தை இரண்டு பேரும் பிடிச்சிட்டுதுகள்.

அந்த இரண்டு பேரிலை ஒருத்தருக்கு இங்கிலீசுப் பெயர். மற்றவாவுக்கு சிங்களப் பெயர். சரி, எங்கடை போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கிற பிறையன் செனிவிரட்ன, விராஜ் மென்டிஸ், பாசண அபயவர்த்தன மாதிரி இவாவும் ஒரு சிங்களப் பிள்ளையாக்கும் என்று நினைச்சு நான் அதை முதலில் பெரிய விசயமாக்கவில்லை.

ஆனால் அவையள் ரீல் விடத் தொடங்கின பிறகு தான் இதுகள் இரண்டு பேரும் சிங்கள அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்ட மனுச வைரசுகளோ என்று நான் ஐயப்பட்டனான்.

அந்த இரண்டு பேரிலை இங்கிலீசுப் பெயர் வைச்சிருக்கிறவர் சொன்னார், தான் தான் ஜெனீவாவுக்கான தமிழீழத்தின்ரை நிரந்தரத் தூதுவர் என்று.

எனக்கு இதைக் கேட்டதும் ஒரு கணம் ஐந்தும் கெட்டு, அறிவும் கெட்டுப் போய்ச்சுது. ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற கதையாக, ஏதோ ஆர்வக் கோளாறில் பெடியன் கதைக்குது என்று நினைச்சு நானும் பேசாமல் இருக்க, ஆள் ரீல் விடத் தொடங்கிச்சுதே!

தன்ரை முயற்சியால் தான் 2013ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாமல் மொரீசியஸ் அரசாங்கம் புறக்கணிச்சதாம். பிறகு பார்சலோனாவில் நிறைவேற்றப்பட்ட தமிழீழத்திற்கு ஆதரவான தீர்மானம், ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை எல்லாம் தான் கொடுத்த அழுத்தம் தானாம் என்று ஆள் கதை விடத் தொடங்கினார்.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்ற கதையாக எவ்வளவு நேரத்திற்குத் தான் ஆள் கதை அளக்கப் போகுது பார்ப்பம் என்று நானும் பேசாமல் இருக்க, கிட்டடியில் பிரான்ஸ் மாநகர சபை ஒன்றிலை தமிழீழத்திற்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் தங்களின்ரை முயற்சி தான் என்று ஆள் இன்னொரு அண்டப் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிச்சுது.

யார் யாரோ முயற்சி செய்து, யார் யாரோ வியர்வை சிந்தி, யார் யாரோ அலைஞ்சு திரிஞ்சு எங்கடை போராட்டத்திற்கு ஆதரவான நகர்வுகளைப் புலம்பெயர்ந்த தேசங்களில் செய்ய, விழுந்த பாட்டில் குறி சுடும் கதையாக ஆள் அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்த புளுகு மூட்டைகளைக் கேட்டு வெதும்பிப் போய் நான் அவரிட்டை நேரடியாக கேட்டேன்: ‘எல்லாம் சரி தம்பி, இப்ப நீங்கள் என்னட்டை எதுக்காக வந்திருக்கிறியள்?’

உடனே அவர் கண்ணைக் காட்ட, அவரோடு வந்திருந்த சிங்களப் பெயருள்ள அம்மணி ஒரு கோவையை திறந்து, அதில் தென்னமரிக்க நாடுகளுக்கு போறதுக்கும், அங்கை இரண்டு, மூன்று கிழமைகள் தங்கியிருக்கிறதுக்கும், அங்கை தாங்கள் தங்கியிருக்கிற நாட்களில் பிரான்சில் உள்ள தங்களின்ரை குடும்பத்தின்ரை செலவுகளுக்கும் என்று ஒரு தொகையை சொல்லி, அதற்கு பங்களிப்பு வேண்டும் என்று சொன்னா.

பிச்சை எடுக்குமாம் பெருமாள், அதைப் பிடுங்கித் தின்னுமாம் அனுமான் என்கின்ற கதையாக, இஞ்சை எங்கடை பிள்ளையள் குளிருக்குள்ளை அலைஞ்சு திரிஞ்சு வேலை செய்து சிறுகச் சிறுகக் காசு உழைக்க, உவையள் தென்னமரிக்க நாடுகளில் சுற்றுலாப் போவதற்கும், அந்த நாட்களில் பிரான்சில் இருக்கிற தங்கடை குடும்பத்து ஆட்கள் ஓய்யாரக் கொய்யகம் போடுகிறதுக்கும் எங்களிட்டை காசைப் பிடுங்க நிற்கீனம்.

எனக்கு வந்த ஆத்திரத்துக்கு...

அதுக்குள்ளை இங்கிலீசுப் பெயரோடு இருந்த அந்தப் பொடிப்பிள்ளை என்னட்டை சொன்னார்: ‘ஐயா, உங்களை மாதிரி ஆட்கள் எங்களுக்கு காசு தந்தால், இருபத்தைஞ்சு வருசத்துக்குள் ஐ.நா. சபையில் தமிழீழத்திற்கு என்று உறுப்புரிமையை எடுத்து விடலாம்.

நாங்கள் என்ன திட்டமிட்டிருக்கிறோம் என்றால், தென்னமரிக்கா, மத்திய அமெரிக்கா, ஆபிரிக்கா, மத்திய ஆசியா என்று ஒரு வருசத்துக்கு நாலு நாடு என்கிற வகையில் பயணம் செய்து, இருபத்தைந்து வருசத்தில் தமிழீழத்திற்கு நூறு நாடுகளின்ரை ஆதரவைத் திரட்டிறது.

ஆனால் அதை நாங்கள் செய்யிறதுக்கு எங்களுக்கான பயணச் செலவு, தங்குமிடச் செலவு, பிறகு எங்கடை குடும்பத்தை பார்க்கிற செலவு என்று இருபத்தைஞ்சு வருசத்துக்கு எங்களுக்கான செலவை உங்களை மாதிரியான ஆட்கள் பொறுப்பெடுக்க வேண்டும்.

நீங்கள் ஒன்றும் செய்யத் தேவையில்லை. எல்லா வேலையையும் நாங்கள் செய்வோம். நீங்கள் எங்கடை செலவுக்கான காசை மட்டும் மாசா மாசம் தந்தால் போதும்.’

போகாத ஊருக்குப் புரியாத வழியைக் காட்டுகிற மாதிரி அவர் கதைச்சுக் கொண்டிருந்ததைக் கேட்டும் இனியும் பொறுக்க முடியாது என்று நான் உடனே அவரிட்டைக் கேட்டேன்: ‘தம்பி உதெல்லாம் எங்கடை தேசியத் தலைவர் பிரபாகரனுக்குத் தெரியாதோ? இல்லாது விட்டால் அவர்தான் தன்ரை ஒரேயொரு தலைவன் என்று வரிச்சுக் கொண்ட அவரின்ரை அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தம்பிக்குத் தெரியாதோ? நீங்கள் சொல்கிற மாதிரித் தமிழீழம் அமைக்கலாம் என்றால், தம்பி பிரபாகரனும், தம்பி பாலசிங்கமும் பேசாமால் உங்கள் இரண்டு பேரையும் மாதிரி ஊர் ஊராகக் கிளம்பித் தமிழீழத்திற்கு அங்கீகாரம் தேடியிருக்கலாமே?

111

பிறகெதுக்குத் தலைவர் ஆயுதப் போராட்டத்தை நடத்தினவர்? அதை நியாயப்படுத்தி உலகமெங்கும் ஏன் பாலசிங்கம் கதைச்சுக் கொண்டு திரிஞ்சவர்? குதிரைப் பந்தயத்தில் கழுதையை ஓட விட்டு ஜெயிக்க வைக்கிற மாதிரி எல்லோ உங்கள் இரண்டு பேரின்ரை கதை இருக்குது...’

உடனே இரண்டு பேருக்கும் முகம் கறுத்துப் போய் விட்டுது. ஒன்றும் பேசாமல் வெடுக்கென்று எழும்பிப் போய் விட்டீனம். பின்னை என்ன?

தமிழீழத்தை வென்றெடுக்கிறதுக்கு உருப்படியான வேலைகளை செய்வதை விட்டுப் போட்டு, சனத்தின்ரை காசில் வயிறு வளர்க்கிறதும், வேறை ஆரும் முயற்சி செய்து ஏதாவது நல்ல காரியங்களைச் செய்தால் அதுக்கு உரிமை கோருவதும் நயமான வேலையள் இல்லைப் பாருங்கோ. ‘நாய் விற்ற காசு குரைக்காது, பூ விற்ற காசு மணக்காது’ என்கிற கதையாகத் தான் இவையளுக்குக் கொடுக்கிற பணத்தின்ரை கதியும் இருக்கும்.

பிறகு தான் தெரிஞ்ச ஆட்கள் மூலம் நான் விசாரிச்சுப் பார்த்தேன். என்ரை மருமகனின்ரை வீட்டை வந்து எனக்கு வகுப்பெடுத்த உந்த இரண்டு பேரும் வேலை வெட்டி இல்லாமல் பிரான்சில் இருக்கிறவையளாம்.

முந்தி எங்கடை ஆச்சி கோபம் வந்தால் சொல்லுவா, ‘நாய்க்கு வேலையில்லை: நிற்க நேரமும் இல்லை’ என்று. அந்த நேரத்தில் எனக்கு அதுக்கு அர்த்தம் விளங்கவில்லை. இப்பத் தான் தெளிவாக விளங்குது.

வேறை என்ன பிள்ளையள், வரட்டே? 

நன்றி: ஈழமுரசு

111