நெகிழி குப்பிகளில் சிறுநீர் கழித்த அமேசான் ஊழியர்கள்! சர்ச்சையில் நிர்வாகம்-

ஞாயிறு ஏப்ரல் 04, 2021

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல அமேசான் நிறுவனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இணைய வர்த்தகத்தில் முன்னணியில் செயல்பட்டு வருகிறது.

மேலும் இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிர்வாகம் செய்துக்கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் போகேன் என்பவர் அமேசான் நிறுவனம் மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். 

இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட செய்தியில்,

ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 15 அமெரிக்க டாலர் ஊதியம் கொடுப்பதால் மட்டும் உங்கள் நிறுவனம் சிறந்ததாக ஆகிவிடாது.

உங்கள் ஊழியர்களை நெகிழி குப்பிகளில் சிறுநீர் கழிக்கவைப்பது எவ்வளவு மோசமான நடவடிக்கை என குறிப்பிட்டு அமேசான் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதையடுத்து இவரின் குற்றச்சாட்டை அமேசான் நிறுவனம் மறுத்தது.

மேலும் இதுகுறித்து அமேசான் நிறுவனம் கூறுகையில்,

நெகிழி குப்பிகளில் சிறுநீர் கழிக்கும் விவகாரத்தை நீங்கள் உண்மையென்று நம்புகிறீர்களா? அது ஒருவேளை உண்மையாக என்றால், யாரும் எங்களுக்காக வேலை செய்ய மாட்டார்கள்? என தெரிவித்திருந்தது.

அமேசான் நிறுவனத்தின் இந்த கருத்தை அடுத்து அமெரிக்காவின் பல முன்னணி ஊடகங்கள , ஊழியர்கள் நெகிழி குப்பிகளில் சிறுநீர் கழிக்கிறார்கள் என்பது விவாதப் பொருளாக மாற்றியது. இதையடுத்து இன்டர்செப்ட் எனும் இணைய செய்தி நிறுவனம், ஓட்டுநர்கள் நெகிழி குப்பிகளில் சிறுநீர் கழிப்பது அமேசான் நிறுவனத்தின் மூத்த ஊழியர்களுக்கும் தெரியும் என செய்தி வெளியிட்டது.

இந்நிலையில், அமேசான் ஊழியர்களின் அவலநிலை குறித்தான கருத்து அமெரிக்கா முழுவதும் பேசு பொருளாக மாறியதையடுத்து, அந்நிறுவனம் பல நாளான மறைத்துவந்த உண்மையை தற்போது ஒத்துக்கொண்டுள்ளது. 

இதனையடுத்து அமேசான் வெளியிட்டுள்ளா மற்றொரு ட்விட்டர் பதிவில்,

போக்குவரத்து அதிகம் இருக்கும் இடங்களிலும், கிராமப்புற பகுதிகளில் வாகன ஓட்டுநர்கள் கழிவறைகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம்.

மேலும் கொரோனா காலத்தில் பொது கழிப்பறைகள் மூடப்பட்டிருந்தது. இந்த பிரச்சனை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதை விரைவில் சரி செய்ய விரும்புகிறோம் என தெரிவித்துள்ளது.

அமேசானின் இந்த பதிவை அடுத்து, மார்க் பேகேன், இது என்னுடைய பிரச்னை அல்ல. இது உங்களுடைய ஊழியர்களின் பிரச்னை. போதுமான மரியாதையுடன் அவர்களை நடத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் அமேசான் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள், தங்களின் ஊழியர்கள் மீது கவலை இல்லாமல் தான் நடந்து கொள்கின்றன.

குறிப்பாக இணைய வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள், பொருட்களை விநியோகம் செய்யும் ஊழியர்களின் சிரமங்களைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், தங்களின் நிதி வருவாயைப் பெருக்குவதிலேயே அக்கறை காட்டுகின்றன என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.