நேற்று பள்ளிகள் திறந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா உறுதி!

வியாழன் சனவரி 21, 2021

தமிழகத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சேலத்தில் 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தும்பல் ஊராட்சியில் உள்ள பள்ளியில், பரிசோதனை மேற்கொண்டதில் மாணவருக்கு தொற்று உறுதியானது.

சேலத்தில் பள்ளிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவனுக்கு காய்ச்சல், சளி இருந்ததையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது, இதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து சுதந்திரமாக முடிவெடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத் தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், கொரோனா சூழலில் பள்ளிகள் மூடப்பட்டதால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மாணவர்கள் மன அழுத்தம், உறக்கமின்மை, உடல்நலக் குறைவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 10 மற்றும் 12ஆம் வகுப்புகள் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவெடுக்க வேண்டியது மாநில அரசு தான் எனவும், எந்த அழுத்தமும் இல்லாமல், அரசு சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இன்னும் 8 முதல் 10 வாரங்களில் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு முடிவெடுக்காவிட்டால் மனுதாரர் மீண்டும் புதிதாக வழக்குத் தொடுக்கலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.