நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!

வெள்ளி ஜூலை 12, 2019

எல்லை தாண்டி மீன்படித்ததாக நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போதும்,தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போதும் அவர்களை சிறீலங்கா கடற்படையினர் தொடர்ந்து கைது செய்கின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று இரவு மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து வந்த சிறீலங்கா கடற்படையினர், மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் 6 மீனவர்களை கைது செய்து சிறீலங்காவுக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து 1 நாட்டுப்படகையும் சிறீலங்கா கடற்படையினர் பறிமுதல் செய்தது.

மேலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டு அவர்களிடம் சிறீலங்கா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் மீது எல்லைத்தாண்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படவுளள்னர்.