நீ மௌனமாய் சென்று விடு!

சனி மார்ச் 21, 2020

 ஊஹானில் பிறந்தாய்  

உறவாடி நுழைந்தாய் 

உறக்கம் கலைத்தாய் 

உயிரை உருவுகிறாய்

விழித்தெழுந்து  முழிக்கிறோம் 

விடை தெரியாமல் 

நீயோ  உல்லாசமாய் உலகெங்கும் உலா வருகிறாய் 

ஒரே மூச்சில் உலகையே புரட்டி விட்டாய்

முகமூடி மனிதர்கள்

வெறிச்சோடிய சாலைகள் 

காலியாய் கடைகள்

அடைபட்டு கிடக்கும் அலுவலகங்கள்

சிறுவர்களின் சிரிப்பில்லா பூங்காக்கள்  

நிரம்பி வழியும் விமான நிலையங்கள்

சரிந்த பங்குச் சந்தைகள்

சல்லியாய்ப் போன மில்லியனர்கள்

உறைந்து போன  வல்லரசுகள் 

கண்னுக்குத் தெரியாமல்  நிற்கின்றாய் 

விஸ்வரூபம் எடுக்கின்றாய் 

நீ யார்? எதற்காக வந்தாய்?

மசூதிகளில் தொழுகை இல்லை 

தேவாலயங்களில் பிரார்த்தனை இல்லை 

கோவில்களில் கூட்டம் இல்லை 

கேளிக்கை கொண்டாட்டங்கள்  இல்லை

மதங்களும் கொள்கைகளும் எங்களைப் பிரிக்க

ஆணவத்தில் மதியிழந்து ஒருவரையொருவர் அழித்தோம் 

வெட்டிப் பேச்சும்  வீண் சண்டையுமாய் விரயமாய்ப் போனதுவாழ்க்கை 

மூச்சை முடக்கினாய் ஆணவம் அடக்கினாய் 

மூச்சு இருந்தால் தானே பேச்சு ?

எந்த மூச்சில் நீ எம்முள் நுழைவாயோ என்ற அச்சத்தில் 

தாழிட்ட இல்லங்களில் இறைவனை இறைஞ்சுகிறோம் 

நீ சென்று விடு , எங்களை விட்டு விடு 

காடுகளை அழித்தோம்

தீயாய்ப் பரவி துவம்சம் செயதாய் 

மண் வளங்களை சூறையாடினோம்

எரிமலையாய் வெடித்தாய்

நீர்நிலைகளை நாசம் செய்தோம்

சுனாமியாய்ப் பொங்கினாய்

விலங்குகளையாவது  விட்டுவைத்தோமா?

வேட்டையாடி தின்று குவித்தோம் 

அவற்றின் கதறல் கேட்டு ஓடி வந்தாயோ ?

இயற்கையின் தூதுவனே ! எமக்கு புத்தி புகட்ட !

மடி  கணினியும்  கை பேசியுமாய்  

நிற்க நேரமின்றி நிமிர விருப்பமின்றி 

ஓடிய நாங்கள் நிலை குலைந்து நிற்கிறோம்

யோசிக்கிறோம்!

கணக்கும் பிணக்குமாய் பிளவுண்ட குடும்பங்கள் 

இன்று இனைந்து நிற்கின்றன 

ஒன்றாய்க் கூடி உண்கிறோம் 

ஸ்விக்கியில். சாப்பாடு வருவதில்லை

உடற்பயிற்சி செயகிறோம் உறவாடி மகிழ்கிறோம் 

வாய் விட்டு சிரிக்கிறோம் !

ஒவ்வொரு சுவாசத்தையும் நன்றி யில் நனைக்கிறோம்

இது தானே நீ விரும்பியது ?

இனி நீ மௌனமாய் சென்று விடு .