நீண்ட காலமாக,பிரேத பரிசோதனைக்காக பொதுமக்களிடம் பணம் கேரும் ஊழியர்!

செவ்வாய் செப்டம்பர் 10, 2019

சாவகச்சேரியில் நேற்றையதினம் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட வயோதிபரின் சடலம் ஒரு நாளுக்கும் அதிகமாக பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்துள்ளது.

பேஸ்லைன் வீதி, கொழும்பு 2 என்ற முகவரியைச் சேந்த 75 வயதுடைய வரதராசா செல்லப்பா என்பவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

அவரது உடல் ஒரு நாளுக்கும் அதிகமாக பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்து, சற்று முன்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிற்றூழியர் இல்லாமையினாலேயே பிரேத பரிசோதனை தாமதித்ததாக குறிப்பிட்ட போதும், பணிக்குப்பொறுப்பான சிற்றூழியர் இன்றும் கடமைக்கு சமூகமளிக்காத நிலையில்,பிறிதொரு சிற்றூழியர் மூலமாகவே குறித்த பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது.

இதேவேளை உயிரிழந்தவரின் உறவினர்களிடம் நேற்றையதினம் சிற்றூழியர் பணம் கேட்டதாகவும்,அவர்கள் கொடுக்க மறுத்ததையடுத்து, வேண்டுமென்றே நேற்றைய நாளை இழுத்தடித்து விட்டு, இன்று கடமைக்கு சமூகமளிக்கவில்லையெனவும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறிப்பிட்ட சிற்றூழியர் நீண்ட காலமாக, பிரேத பரிசோதனைக்காக பொதுமக்களிடம் பணம் கேருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் இது குறித்து, பாதிக்கப்பட்டவர்களால் எழுத்து மூலமாகவும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் முறையிடப்பட்டிருந்தபோதும் வைத்தியசாலை நிர்வாகம் அந்த முறைப்பாடுகளை கண்டுகொள்ளவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.