நீண்ட பல்லுக்காரன் சிரித்தாலும், அழுதாலும் ஒன்று தான்! 

சனி டிசம்பர் 14, 2019

வணக்கம் பிள்ளையள்.
என்னடா கிழவன் முப்பத்திரண்டு பல்லையும் காட்டிக் கொண்டு வருகுது என்று நீங்கள் தலையைச் சொறியிறது எனக்கு விளங்குது.

அதுவும் உங்கடை பிரச்சினை நான் பல்லைக் காட்டிக் கொண்டு வருகிறன் என்பதை விட, எனக்கு இந்த வயதிலும் ஒரு பல்லும் விழாமல் இருக்குது என்பது தான் என்று எனக்குத் தெரியும்.

உதிலை ஒரு இரகசியமும் இல்லை பிள்ளையள். எல்லாம் புத்தம் புதுசாகக் கட்டின பொய்ப் பல்லுகள் தான். அது தான் முப்பத்திரண்டு பல்லையும் காட்டிக் கொண்டு வருகிறன்.

பின்னை என்ன? பொக்கை வாயோடு நான் கதைச்சால் உங்களுக்கு ஏதாவது விளங்குமே?

சரி விசயத்துக்கு வாறன்.

இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் டில்லிக்குப் போன எங்கடை கோத்தபாய மாத்தையாவிட்டை தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கத்தைக் கொடுக்கச் சொல்லி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டவராம்.

அதுவும் சும்மா இல்லை பிள்ளையள். எங்கடை கூத்தமைப்புக்காரரின்ரை வார்த்தைகளில் சொல்கிறது என்றால் வலியுறுத்திக் கேட்டவராம்.

அதுக்குக் கோத்தபாய சொன்னவராம், ‘உதெல்லாம் சரி வராது. உதுக்குச் சிங்களச் சனம் ஒருக்காலும் இணங்
காது. வேணும் என்றால் தமிழ் மக்களுக்கு வேலை போட்டுக் கொடுக்கிறதுக்கு அடுக்குப் பார்க்கிறேன்’ என்று.
ஆனாலும் மோடியார் விடவில்லை. சந்திப்பு முடிஞ்சதும் செய்தியாளர்களைச் சந்திக்கும் பொழுது, உதே பல்லவியைப் பாடியிருக்கிறார்.

அந்த இடத்தில் எதுவும் பேசாமல் பெட்டிப் பாம்பாக இருந்த கோத்தபாய மாத்தையா, பிறகு இந்திய ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி கொடுக்கும் போது சொன்னவராம், ‘தமிழ் மக்களுக்கு நான் அதிகாரப் பரவலாக்கமும் கொடுக்கப் போகிறதில்லை, பொலிஸ் அதிகாரமும் கொடுக்கப் போகிறதில்லை. அபிவிருத்தி மட்டும் தான் கொடுப்பேன்’ என்று.

உதைக் கேள்விப்பட்டதும் எங்கடை கூத்தமைப்புக்காரர் கொஞ்சப் பேர் குழம்பிப் போய் அவசரமாக கிழட்டுச் சம்பந்தரிட்டை விளக்கம் கேட்டிருக்கீனம்.

அதுக்கு சம்பந்தர் சொன்னவராம், ‘கோத்தபாய அப்படித் தான் சொல்லுவார், ஆனால் இந்தியா சும்மா இருக்
கப் போவதில்லை. 13ஆவது திருத்தச் சட்டம் என்பது இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

அதைக் கோத்தபாய மீறினால் இந்தியா சும்மா இருக்காது என்கிற படியால் நீங்கள் யாரும் யோசிக்க வேண்டாம்’ என்று.

நீ அரிசி கொண்டு வா, நான் உமி கொண்டு வாறன், சமமாய் கலந்து ஊதி ஊதி நாங்கள் சாப்பிடலாம் என்கிற மாதிரி அறளை பெயர்ந்து போய் சம்பந்தர் ஏதோ உளற, அதை ஒரு கதையயன்று அவரின்ரை அல்லக்கைகள் சிலதுகள் ஊரெல்லாம் பரப்பிக் கொண்டு திரியிதுகள்.

அது தான் சிரிப்பை அடக்க முடியாமல் முப்பத்திரண்டு பல்லையும் காட்டிக் கொண்டு வந்தனான் பிள்ளையள்.
உந்த இந்திய - இலங்கை ஒப்பந்தம் எப்ப கைச்சாத்தாகியது பிள்ளையள்? ஒப்பந்தம் கைச்சாத்தாகி முப்பத்திரண்டு வருசம் ஆச்சுது. இந்த முப்பத்திரண்டு வருசத்திலை ஏதாவது உருப்படியாக நடந்திருக்குதே?

அல்லது உந்த ஒப்பந்தத்தை சிங்களவன் அமுல்படுத்தவில்லை என்பதற்காக இந்தியாதான் ஏதாவது செய்ததோ?

ஒப்பந்தம் கைச்சாத்தாகும் போது சம்பந்தருக்கு ஐம்பத்தி நாலு வயது. இப்ப கிழவனுக்கு எண்பத்தாறு வயது கடந்திட்டுது பாருங்கோ.

கிழட்டுச் சம்பந்தர் கருணாநிதியின் வயதுக்கு வந்தாலும் எதுவுமே நடக்கப் போவதில்லை பிள்ளையள். நானும் இருந்து பார்க்கத் தானே போகிறேன்.

பட்டும் பட்டாடையும் பெட்டியில் இருக்கும், காற் காசு கந்தையில் ஓடி உலாவும் என்கிற கதையாக பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தில் உள்ள காணி அதிகாரமும், பொலிஸ் அதிகாரமும் அமுல்படுத்தப்படாமல் இருக்க, மாகாண சபைகள் மட்டும் உப்புச் சப்பில்லாமல் வெற்று வேட்டுகள் போல் கடந்த முப்பத்திரண்டு வருசங்களாக இயங்கிக் கொண்டிருக்குது.

அந்த நாளிலேயே எங்கடை தம்பி பிரபாகரன் சொன்னவர், உந்த மாகாண சபைகளால் தமிழர்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை என்று.

அப்ப தம்பிக்கு வயது முப்பத்தி மூன்று. உதைக் கேட்டுப் போட்டு பருத்திக்கு உழும் முன் தம்பிக்கு எட்டு முழம் என்கிற கதையாக அப்பாப்பிள்ளையின்ரை மகன் அமிர்தலிங்கத்தார் சொன்னவராம், ‘தம்பி பிரபாகரனுக்கு மாகாண சபைகளின்ரை தார்ப்பரியம் விளங்கவில்லை.

உந்த மாகாண சபைகளுக்குள் தான் தமிழருக்கு விடிவே இருக்குது’ என்று.

இப்ப நீங்கள் சொல்லுங்கோ பிள்ளையள், ஆருக்கு மாகாண சபைகளின்ரை தார்ப்பரியம் விளங்கவில்லை என்று. தம்பி பிரபாகரன் ஒரு தீர்க்கதரிசி பிள்ளையள். அதாலை தான் இன்றைக்கு ஒவ்வொரு தமிழர்களின் இதயங்களிலும் நிரந்தரமாகத் தேசியத் தலைவர் என்ற சிம்மாசனத்தில் அவர் அமர்ந்திருக்கிறார்.

இன்றைக்குப் பத்து வருசமாச்சுது தம்பியின்ரை குரலை நாங்கள் கேட்டு. ஆனாலும் எங்கடை விடுதலை உணர்வு என்ன மங்கியே போச்சுது? தம்பி பிரபாகரன் மூட்டின தீ இந்த முறையும் மாவீரர் நாளில் கொழுந்து விட்டெரிஞ்சதை முழு உலகமும் பார்த்தது தானே பிள்ளையள்.

எது எப்படியோ, சிங்களவன் எங்களுக்கு எந்தக் காலத்திலையும் எதையுமே தரப் போகிறதில்லை.

நீண்ட பல்லுக்காரன் அழுதாலும், சிரித்தாலும் ஒன்றுதான் என்கிற கதையாக சிங்களவன் சமஸ்டி தருவதாகச் சொன்னாலும் சரி, அதிகாரப் பரவலாக்கம் தர மாட்டேன் என்று சொன்னாலும் சரி, எல்லாம் எங்களுக்கு ஒன்று தான் பிள்ளையள்.

உதுக்குள்ளை தமிழ் மக்களுக்கு கோத்தபாய அபிவிருத்தி கொடுக்கப் போகிறாராம். எங்களை என்ன இளிச்ச வாயனுகள் என்றே சிங்களவன் நினைச்சுக் கொண்டு இருக்கிறான்? பசுவின் மடியை அறுத்துப் போட்டுப் புண்ணாக்கு வாங்கக் காசு கொடுத்த கதையாகத் தான் அவரின்ரை அபிவிருத்திக் கதை இருக்குது. ஒன்றரை இலட்சம் தமிழர்களை அவர் ஈவிரக்கமின்றிக் கொல்லுவாராம், பிறகு தமிழருக்கு அபிவிருத்தியும் வேலை வாய்ப்பும் தருவாராம்.

இந்த இடத்தில் எனக்கு ஒரு தடவை இலண்டனில் நடந்த மாவீரர் நாளில் தம்பி பாலா, அது தான் எங்கடை அன்ரன் பாலசிங்கம், சொன்னது தான் ஞாபகத்துக்கு வருகுது.

சிங்களவனுக்கு ஒரேயயாரு பாசை தான் விளங்கும். அடி தான் அது என்று அப்பவே தம்பி பாலா தெளிவாகச் சொன்னவர்.

ஏதோ, விளங்கிறவையள் விளங்கிக் கொண்டால் சரி.

இந்தக் கிழமை தம்பி பாலாவின்ரை நினைவு நாள் வருகுது. சும்மா வருசா வருசம் அவரின்ரை படத்துக்கு கற்பூரம் கொளுத்தி ஆராதனை செய்து, மலர் மாலை அணிவிச்சு, நாலு வீர வசனம் பேசுகிறதோடு நிற்காமல், தம்பி பாலாவின்ரையும், எங்களுக்காக தங்கடை இளைய உயிர்களை அர்ப்பணிச்ச ஆயிரமாயிரம் மாவீரர்களின்ரையும் கனவையும் நனவாக்குவதற்கு ஆக்கபூர்வமான முயற்சிகளை இந்த முறையாவது எங்கடை ஆட்கள் எடுத்தால் சரி.

111

தம்பி பாலா திரும்பத் திரும்பச் சொல்கிறவர்: பலத்தில் இருந்து தான் அரசியல் பேசலாம் என்று. இல்லை என்றால் பூனை இளைத்தால் எலி கூட மச்சான் முறை கொண்டாடும் பாருங்கோ. ஏற்கனவே அது தான் நடக்குது.

வேறை என்ன பிள்ளையள்? அப்ப நான் போய் விட்டு வரட்டே?

நன்றி: ஈழமுரசு