நீரிழிவு நோயை வெற்றி கொள்வோம்!

ஞாயிறு டிசம்பர் 15, 2019

நீரிழிவு (டயாபடீஸ்) என்பது தவறான வாழ்க்கை முறைகளினால் ஏற்படும் ஒரு பிரச்சினையே தவிர அது ஒரு நோய் அல்ல.

நீரிழிவு (டயாபடீஸ்) என்பது தவறான வாழ்க்கை முறைகளினால் ஏற்படும் ஒரு பிரச்சினையே தவிர அது ஒரு நோய் அல்ல. கடந்த தலைமுறைகளில் வாழ்ந்தவர்கள் அதிகம் நடந்தார்கள், சத்தான உணவுகளை பசிக்காக மட்டுமே சாப்பிட்டார்கள். தேவையான உடலுழைப்பும், போதுமான தூக்கமும் மன இறுக்கம் இல்லாத தினசரி வாழ்க்கையை கடைபிடித்தார்கள்.

ஆனால் நாமோ இன்றைய காலகட்டத்தில் நார்ச்சத்து இல்லாத துரித உணவுகள் சாப்பிடுவது, தண்ணீருக்கு பதிலாக செயற்கை குளிர் பானங்கள் குடிப்பது, நாகரிகம் எனக்கருதி மது, புகை பழக்கங்களுக்கு இளைஞர்கள் ஆளாவது என்ற தவறான வாழ்க்கை முறையை கடைபிடித்து வருகிறோம். இதனால் டயாபடீஸ் இளம் வயதினரையும் அதிகளவில் தாக்குகிறது.

டயாபடீஸ் என்பது கணையத்தின் திறன் குறைவதாலோ, இன்சுலின் அளவு குறைவதாலோ தாமதமாக சுரப்பதாலோ ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நீடித்து அதிகரித்து இருப்பதால் கண், இருதயம், சிறுநீரகம், ரத்தக்குழாய்கள் நரம்புகள் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.

பெரும்பாலோருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடியிருப்பதால் எந்த அறிகுறியும் தெரிவதில்லை. மருத்துவ பரிசோதனை செய்யும்போது மட்டுமே இது வெளிப்படும். எனவே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் இருக்கும்பட்சத்தில் மற்றவர்களுக்கு ரத்த சர்க்கரை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நீரிழிவு உள்ளவர்கள் மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் சரியான உணவு முறைகளையும், மிதமான உடற்பயிற்சிகளையும் செய்து வரவேண்டும்.

நீரிழிவு உள்ளவர்கள் தவறாமல் மருந்துகள் எடுத்துக் கொண்டு, ஆண்டிற்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடல் எடையை கட்டுக்குள் வைப்பதும், புகை, மது போன்றவற்றை தவிர்ப்பதும் அவசியம். கால்களை கவனமாக பராமரிக்க வேண்டும். மனதை தளர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய வகையில் நீரிழிவு உள்ளவர் செயல்பட்டால் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழலாம்.