நீரிலும் நிலத்திலும் செல்லும் கப்பலை இயக்கி இரு பெண்கள் சாதனை!

சனி மார்ச் 09, 2019

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரை, நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய அதிநவீன ரோந்து கப்பலை முதன் முறையாக இயக்கி, இரண்டு பெண்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்திய கடலோரப்படையின் ஹோவர் கிராஃப்ட் கப்பலில் துணை மாலுமியாக  பணிபுரிந்த அனுராதா சுக்லா மற்றும் ஸ்ரீரின் சந்திரன். இவர்கள் இருவரும் கடந்த 6ஆம்  திகதி முதன் முறையாக, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து சென்னைக்கு ஐ.சி.ஜி. ஹோவர் கிராஃப்ட் எனப்படும் நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய அதிநவீன ரோந்து கப்பல் மூலம் புறப்பட்டனர்.

மணிக்கு 300 நாட்டிகல் மைல் வேகத்தில் காரைக்கால் மற்றும் புதுச்சேரி வழியாக இரண்டு நாட்கள் பயணித்து, சர்வதேச பெண்கள் தினமான நேற்று  மதியம் 1.21 மணிக்கு சென்னை துறைமுகம் சென்றனர்.

குறித்த பெண்களை இந்திய கடலோரப்படை அதிகாரிகள் வரவேற்றனர்.

இதுகுறித்து அனுராதா சுக்லா தெரிவித்ததாவது,

“கடந்த 6ஆம் திகதி மதியம் 1 மணிக்கு நாங்கள் காரைக்கால் சென்றுவிட்டோம். ஆனால், மோசமான வானிலை காரணமாக மேற்கொண்டு எங்களால் பயணத்தை தொடர முடியவில்லை. அதனால், நேற்றுக் காலை 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, மதியம் 1.21 மணிக்கு சென்னை சென்றடைந்தோம்” என்றார்.

கடலோரப்படை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஹோவர் கிராஃப்ட்டை இயக்குவதில் பெண்கள் துணை மாலுமியாகவே மட்டுமே செயல்பட்டுள்ளனர். ஆனால், மாலுமி மற்றும் துணை மாலுமியாக  இருவரும் பெண்களாக இருந்து இயக்கியது இதுவே முதல் முறை. எதிர்பாராத விதமாக, சர்வதேச பெண்கள் தினத்திலேயே இவர்கள் குறித்த சாதனையை படைத்ததில் பெரும் மகிழ்ச்சி” என்றார்.