நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுட்டுப் படுகொலை! சக வழக்கறிஞர் கைது-

புதன் அக்டோபர் 20, 2021

உத்தர பிரதேசம்- உத்தரபிரதேச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப் பட்ட சம்பவம், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்ட நீதிமன்றத்தின் மூன்றாவது மாடியில் நேற்று ஒக்டோபர் 19-ம் திகதி நண்பகலில் திடீரென துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டது.

இந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக, அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது வழக்கறிஞர் ஒருவர் குண்டு பாய்ந்து இரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்தார். இறந்து கிடந்த வழக்கறிஞர் பக்கத்தில் நாட்டு துப்பாக்கி ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்த நபர் ஜலாலாபாத்-தை சேர்ந்த புபேந்திர பிரதாப் சிங் என்ற வழக்கறிஞர் என்பது தெரியவந்தது. இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள், குற்றவாளியை உடனடியாக கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த தனிப்படை காவல்துறையினர் நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து சக வழக்கறிஞர் ஒருவரை அதிரடியாக கைது செய்தனர்.

தனிப்படை காவல்துறையினர் விசாரணையில், கைது செய்யப்பட்ட சக வழக்கறிஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார், மேலும் முன்பகை காரணமாக இந்த கொலை செய்ததாகவும் வழக்கறிஞர் பிரசாந்த் குமார் தெரிவித்தார்.

நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கேள்விக்குறியாக இருக்கிறது என கேள்வி எழுப்பினர்.

மேலும் பகுஜன் கட்சித் தலைவர் மாயாவதி, நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கொல்லப்பட்டிருப்பது வெட்கக் கேடானது என்றும் வருத்தமானது என்றும் தெரிவித்துள்ளார்.