நீதியமைச்சருக்கு எதிராக தேரர்கள்!

செவ்வாய் பெப்ரவரி 23, 2021

பௌத்த விகாரை  மற்றும் தேவாலய சட்டங்கள் குறித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ள மஹா சங்கத்தினர், கடந்த 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் மேற்படி விவகாரம் தொடர்பில், நீதியமைச்சர் அலி சப்ரி ஆற்றிய உரை தொடர்பிலும் நடவடிக்கை எடுக்குமாறு, அக்கடிதத்தின் ஊடாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக்கடிதத்தின் நகல் சபாநாயகருக்கும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதுடன், அமைச்சரின் உரையை ஹன்சாட்டில் இருந்தும் நீக்குமாறு, அந்தக் கடிதத்தில் சபாநாயகரிடம் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேரர்கள் 11 பேரின் கையொப்பத்துடன், இந்தக் கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடமான, பேராசிரியர் எல்.ஜே.எம்.குரே என்பவரால், 'இலங்கையின் சட்டத்தின் அறிமுகம்' என்ற புத்தகத்தின்படி, கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லிம் சட்டம் என்பன உள்வாங்கப்பட்டுள்ள நிலையில், அதில் கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம் என்பன பிரதேச ரீதியிலான சட்டமாக அடையாளம் காணப்பட்டு உள்ளதுடன்,முஸ்லிம் சட்டம் மாத்திரமே சொல்லின் அர்த்தத்திலேயே தனியார் சட்டமாக அடையாளப்படுத்தப்படுவதாக் அக்கடித்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 பௌத்த விகாரை மற்றும் தேவாலய சட்டம் என்பன, அவர்களின் நிதி, நிர்வாகம் தொடர்பான விதிகளின் தொகுப்பு என்பதுடன், இவை அரசியலமைப்பின் 9ஆவது உறுப்புரைக்கு இணைவான சட்டம் என்பதால், அமைச்சரின் கருத்து, புத்தசாசனத்துக்கு எதிரான தீவிர கருத்தாக உள்ளதாகவும் அந்தக் கடித்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமைச்சரின் பொறுப்பற்ற இந்தக் கருத்து, நாட்டுக்கும் மக்களுக்கும் முக்கியமாக பௌத்த சாசனத்துக்கும் எதிரான கருத்தாகும். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றும் இந்தக் கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.