நினைத்ததை நடத்திக் காட்டும் நுட்பம்!

கணினிக்கும்,மூளைக்கும் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் ஆராய்ச்சியில்,'பேஸ்புக்' ஈடுபட்டு வருகிறது.பல ஆண்டுகளாக நடக்கும் இந்த ஆய்வில்,ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பற்றி,பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் மைக் ஷ்ரோபெர்,தம் அலுவலக கூட்டத்தில் பேசியுள்ளார்.
சில இணைய தளங்களிடம் அக்கூட்டத்தின் காணொளி காட்சிகள் கசிந்துள்ளது.
மூளைக்கும், கணினிக்கும் இடைமுகமாக ஒரு தலைக்கவசம் போன்ற கருவியை, பேஸ்புக்கின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதை அணிந்து கொள்பவரின் மூளையில் உதிக்கும் எண்ணங்களை, அக்கருவி கட்டளைகளாக மாற்றி கணினியின் மென்பொருளுக்கு தருகிறது.
இதன் மூலம்,விசைப் பலகை, சுட்டி போன்றவற்றை கையால் இயக்காமல்,வெறும் எண்ணத்தின் மூலமாகவே கருவிகளை இயக்க முடியும்.
“இந்த தொழில்நுட்பத்தை பெருவாரியான மக்கள் ஏற்கும் வகையில் உருவாக்கி, அறிமுகப்படுத்த வேண்டும்” என, மைக் ஷ்ரோபெர், அந்த சந்திப்பில் பேசியிருக்கிறார்.