நினைவு தூபியிலிருந்து  ஆத்மாக்களின் அவலம்

செவ்வாய் சனவரி 12, 2021

ஐயோ..ஐயோ  ...இடிக்காதேங்கோ....
வலிக்கு....
வலிக்குது...
நீங்கள் நினைக்கிறீர்கள்...
இது கல்லென...
இல்லப்பா...இல்ல..
துடிக்க துடிக்க கொல்லப்பட்ட..
பல்லாயிரம் உயிர்கள் நாம்...
மூச்சுவிடும் உயிர்ப்புள்ள நினைவு இடமப்பா இது...
ஏனடா எம்மை அழிக்கிறீர்கள்...
"ஐயோ இடித்து தள்ளாதீங்கோ வலிக்குது...
விடுங்கோ..."
நீங்கள் நினைக்கலாம்...
நாங்கள் இப்பூமியை விட்டு சென்று 
விட்டோம் என...
இல்லப்பா...
நாம் இந்தபூமியில் வாழும்
காலத்தை இன்னும் 
முடிக்காத அப்பாவிதமிழ் உயிர்கள்நாம்...
எங்கள் உயிர்கள் ஈழநிலமதில்
ஊசலாடியே 
இருக்கின்றன...
"ஐயோ இடிக்காதேங்கோ....
நோவுது..நோவுது...."
வாழ்நாள் பூராகவும்...
எத்தனை வலிகளை சுமந்தோம்...
நெடுநாள் பசிகிடந்து வரண்டோம்...
பிஞ்சும் சதையுமாய்  சிதையுண்டு
புதையுண்டோம்..
எங்கள் உடல்கள்தான்
இல்லை  ஈழ மண்ணில்...
ஆனாலும் ஊசலாடும் 
உயிர்களாய் இந்த நினைவுத்தூபியினிலே
உயிர்புடன் உறங்குகிறோம்...
"ஐயோ இடிக்காதேங்கோடா...
வலிக்குதடா. ."
எத்தனை பூமியின் மாந்தர்களை இரந்து கேட்டோம்..
எத்தனையோ இறைவர்களை கைகூப்பி தொழுதோம்...
எட்டுத்திக்காய் உயிர்காத்திட ஓடி அலைந்தோம்..
யாரும் எமை காத்திட
கருணை காட்ட வில்லை...
கொடிய சிங்களமும்.
உலகவல்லாதிக்கமும்..
ஹிந்தியமும் எமை கொண்று புதைத்தார்கள்...
இந்த வஞ்சக உலகின் மாறுபாடான நீதியின் பொய்முகத்தை கிழித்தபடி..
இந்த நினைவிடத்தில் உறங்கிகொண்டு இருக்கிறோம்...
"ஐயோ இடிக்காதேங்கோ
வலிக்கு.."
நாம் ஒன்றாகி இருக்கும் இந்த 
நினைவிடம் பார்ப்பவர்க்கு கல்லாக இருக்கலாம்...
அந்த கல்லறைகளுக்கும்
சக்தி உண்டு என்பதை மறந்திடாதீர்கள்...
நாம் ஆயிரம் விடுதலை கனவை சுமந்தவர்கள்
எங்கள் கொதிப்பை பூமி அறியும்
ஈனர்கள் எப்படி அறிவர்..
ஐயோ இடிக்காதேங்கோ 
வலிக்குது...
நாம் வாழும் போதும்...
இன விடுதலையை உரத்து கேட்ட போதும்
மானிட கருணைக்கு அப்பால்
ஈன இரக்கமின்றி...
வதைசெய்த பாதகர்களே
கொடியோர்களே...
நினைவிடத்தில் அமைதியா நாம் 
உறங்கினாலும்...
எம் மண்ணையும்....
உறவுகளையும் நினைந்துருகி
நாம் இங்கு ....
ஐயோ இடிக்காதங்கோ...
வலிக்குது...வலிக்குது..
இங்கே பாருங்கோ.
பல்லாயிரம் குழந்தைகள்...
பல்லாயிரம் இளைஞர் யுவதிகள்...
பல்லாயிரம் தாய்மார்..தகப்பன்மார்..
முதியோர்கள்...சிறியோர்கள்..என 
நாம் அத்தனைபேரும் ஓன்றாகி
ஓர் மூச்சாகி இந்த நினைவிடத்தில்
உறங்கி கொண்டிருக்கிறோம்...
எங்கள் அமைதியை குழப்பாதீர்கள்..
எங்கள் இருப்பிடத்தை சிதைக்காதீர்கள்...
!ஐயோ  இப்படி உடைக்கிறீர்கள் 
வலிக்குது..விடுங்கடா...விட்டிடுங்கோ..
ஐயோ..ஈழநிலத்து வாழும் தமிழா...
மானமுள்ள தமிழா...
வணங்கா மண்ணின் பிள்ளைகளே..
விடுதலை நெருப்பை சுமந்த மானத்தமிழா!
நாம் உறங்கும் நினைவிடத்தை
சிதைத்திடும் பாதகர்களின்
பிடியில் இருந்து எம்மை காத்திடுங்கள்..
அந்த நினைவிடந்தான்...எங்கள் உறைவிடம்...
அந்த நினைவிடத்தின் ஒவ்வோர் கற்கள்..மண்துகள்களில் கூட 
எங்கள் எல்லோர்களது உயிர்கள் 
கலந்துள்ளது...
இது உயிர்ப்புள்ள நிலம்..
நாம் உயிர்ப்புள்ள கல்லறை நினைவிடமாக
இங்கிருக்கிறோம்...
எங்களை இந்த கொடுங்கோலில் இருந்து
காத்திடுங்கள்...
இந்த நினைவிடம்  எங்கள் ஆத்மாவுக்களுக்கானது.....
எங்கள் ஆத்மாக்களை கலைக்க முனைகிறார்கள்...
எங்களுக்காக ஒன்றாகுங்கள்...
எங்களை இந்த நினைவிடத்தில் அமைதிகொள்ள செய்திடுங்கள்..