நினைவுகளாய் வாழ்பவன் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி! – ஆதிலட்சுமி சிவகுமார்

திங்கள் பெப்ரவரி 11, 2019

நீ உதிர்ந்துவிட்டதாய்
உலகம் சொன்னாலும்
இன்னமும்
உதித்துக்கொண்டிருக்கிறாய்
எமக்குள்…
உதிரும் நாட்களில் கூட
உனக்குள்
பெருகிக் கிடந்தது தேசப்பற்று.
மழைக்கால வானவில்போல
வர்ணம் காட்டி
வாழ்வைச் சுவைத்து
வரலாறுகளைப் பதிவிட்டு
உதிர்த்தாய் உன் உயிரை.
இறப்பு என்பது
இன்னொரு பிறப்பு என்றே
எண்ணுபவள் நான்..
நீயும் சாகவில்லை
சிரிப்பு…
தர்க்கிப்பு….
எழுத்து…
அன்புகலந்த பாசம்… என
வாழ்ந்துகொண்டிருக்கிறாய்
எங்களுக்குள்.
வரலாறு அழிவதில்லை.
காலம் உன்னைத் தன்
கைகளில் ஏந்திவைத்திருக்கிறது.
முள்முடி சுமந்தலைந்த
அந்தநாட்களின் பயணத்தில்
உன் தாயக மூச்சின்
வேகத்தை நினைக்கிறோம்.
சன்னதமாடிய சமருக்குள்
சுற்றியலைந்து செய்திகள் தந்தாய்.
பின்பொருநாள் விம்மியழ வைத்து
நீயே செய்தியானாய்.
நெஞ்சுருகுகிறோம்… என்றும்

நினைத்திருப்போம்.
நினைவுகளாய்…எம்முள்
வாழ்ந்திருப்பாய் நீ!

-ஆதிலட்சுமி சிவகுமார்.-